தூத்துக்குடி:முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூலை 31) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டுப்பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கூட்டம் அதிகரித்துக்காணப்படுவதால் நூறு ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு முறைகேடான வரிசைகளில் தரிசனத்திற்கு அழைத்துச்செல்கின்றனர். அவ்வாறாக பக்தர்களிடம் பணத்தைப்பெற்றுக் கொண்டு மூத்த குடிமக்கள் செல்லக்கூடிய வரிசையில் பக்தர்களை அர்ச்சகர்கள் அழைத்துச்சென்றதாகத் தெரிகிறது.
அப்போது அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவலர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின்போது அர்ச்சகர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அர்ச்சகர் ஒருவர் பணியில் இருந்த காவலரை சட்டையைப்பிடித்து இழுத்து தள்ளிவிட்டார். இந்த தகராறினை அங்கு இருந்த பக்தர்கள் தங்களுடைய மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். மேலும் தகராறின்போது அர்ச்சகர் ஒருவர் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.