அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து பன்னிரெண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்ற இத்திருவிழாவில் நாள்தோறும் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இதனையொட்டி வள்ளி சமேத குமரவிடங்கப் பெருமான், விநாயகர் கோயிலில் இருந்து வந்து தனித்தனியே தேரில் எழுந்தருளினர். பின்னர் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது ரத வீதிகளில் சுற்றி நிலையம் வந்தடைந்தது.
இதனையடுத்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தேரை,பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கத் தொடங்கினர். அப்போது பக்தர்கள் 'அரோகரா' எனும் பக்தி முழக்கத்துடன், திருத்தேரை வடம் பிடித்து ரத வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்தேரோட்டம் இந்த தேரோட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் சார்பில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.