தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் காந்தியை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம், தாளமுத்து நகர் சிலுவைப் பட்டியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது,
'இடைத்தேர்தலுக்குப் பின்னால் அரசியல் சூதாட்டம்' - கமல் ஹாசன் குற்றச்சாட்டு - மக்கள் நீதி மய்யம்
தூத்துக்குடி: நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் உள்ளது என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
"அரசியலில் நேர்மையை முதலீடு செய்து, துரோகத்தை முதலீடு செய்துள்ளவர்களை அகற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நம் பிள்ளைகளைப் பார்த்து, நாம் ஏற்றி வைத்த அரசே துப்பாக்கிச் சூடு நடத்திய கொடுமை இனி நிகழக் கூடாது. இதற்கு நம் ஆணைப்படி நடக்கும் அரசு, சட்டப்படி நடக்கும் அரசு உருவாக வேண்டும். நீங்கள் பார்க்காத ஒரு எதிர் காலத்தை, நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பார்க்க வேண்டிய மாற்றத்திற்கான விதையை தூவாமல் போய்விட்டால் நாமும் துரோகிகளாவோம்.
தமிழ்நாட்டில் 4 தொகுதிகளுக்குத்தான் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் உள்ளது. அதை மாற்றும் விசை உங்களின் விரல்களில் உள்ளது. ஒரு விரல் புரட்சி செய்யுங்கள். அதன் பின் என்னுடைய பேச்சும் செயலும் வேகம் எடுக்கும். எங்களின் கட்சியிலும் பிழை இருக்கும். அந்த பிழையை குறித்து ஒரு பெரும் கூட்டத்தை கேள்வி கேட்க விட்டு அதற்கான பதில் கூறுவோம். இன்று அதை எதிர்த்து ஒரு புதிய மாற்றத்தை ஒரு புதிய கருத்தை எடுத்துச் சொல்வதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை இளைஞர்களாகிய நீங்கள், உங்களின் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்றார்.