தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பகுதிகளில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வை விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கடலையூரில் உள்ள உப்பு சத்யாகிரக தியாகி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். எட்டையபுரத்தில் மகாகவி பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், "இந்த மாத இறுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை, வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய பணிகளை தொடங்கி வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். திரையரங்கு திறப்பது குறித்து செப்டம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி திரையரங்குகள் திறக்கப்படும்.