தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொல்லொண்ணா துயரத்தை சந்திக்கும் உப்பளத் தொழிலாளர்கள் - செவி சாய்க்குமா தமிழ்நாடு அரசு? - Thoothukudi news

கரிக்கும் வாழ்வு இனிக்க செய்ய உப்பளத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தனி நல வாரியம் அமைத்து 4 மாத காலங்கள் ஆகியும் நிறைவேற்றப்படாத இச்சூழலில் இவர்களின் துயரத்தை எடுத்துரைக்கிறது, இச்செய்தி தொகுப்பு....

Etv Bharat சொல்லொணா துயரத்தை சந்திக்கும் உப்பள தொழிலாளர்கள்
Etv Bharat சொல்லொணா துயரத்தை சந்திக்கும் உப்பள தொழிலாளர்கள்

By

Published : Aug 10, 2023, 10:53 PM IST

சொல்லொண்ணா துயரத்தை சந்திக்கும் உப்பளத் தொழிலாளர்கள் - செவி சாய்க்குமா தமிழ்நாடு அரசு?

தூத்துக்குடி:இந்தியாவில், குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் அதிகளவு உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதன் பின் வேதாரண்யம், புதுக்கோட்டை என்று உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கன்னியாகுமரி முதல் செங்கல்பட்டு செய்யூர் வரைக்கும் கிட்டத்தட்ட 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பள நிலங்கள் இருக்கின்றன.

இதில், லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பள நிலங்கள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட நேரடியாக 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், மறைமுகமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என கிட்டத்தட்ட 50 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரை நடைபெறும். ''உப்பிட்டவரை உள்ளளவும் நினை''; "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று கூறுவார்கள் முன்னோர்கள். அதற்கு மூல காரணமாணவர்களின் துயரம் சொற்களில் காட்ட முடியாதவை. சுமார் 12 மணிநேரம் மாடாய் உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்கு ஒரு கழிவறை, நல்ல குடிநீர் கிடையாது. மழையோ, வெயிலோ ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாது.

உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளப்பகுதியில் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது அதிகமான சூரியனின் வெப்பம் படும்பட்சத்தில் அதில் இருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர் வீச்சுகள் மூளை மற்றும் கண் பார்வை, சிறுநீர் கடுப்பு போன்ற பல உபாதைகளையும் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள், மருத்துவர்கள்.

கால், கை பாதங்களில் புண் போன்ற ஒவ்வாமையையும் உணரமுடியும். இது ஒரு புறம் இருக்க மதுப் பிரியர்களின் அட்டகாசமோ வேறு. ஆம், மது பாட்டில்களை உப்பளத்தில் வீசி விட்டுச் செல்வதால் பாட்டில் கிடப்பதே தெரியாமல் அதனை மிதித்து ரத்த காவு வாங்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள், தொழிலாளர்கள்.

இதில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை பொய்த்தால், உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையோ, வருமானமோ இல்லை. அவர்கள் பண்டிகை நாட்களில் கூட தங்கள் உப்பள உரிமையாளர்களிடம் கடனைப் பெற்று பிழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் வேலையை மீண்டும் தொடங்கும் போது அவர்களின் தினசரி ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறதாம்.. இவ்வளவு துயரத்தை அனுபவித்து வந்த தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தச் சூழலில் கரிக்கும் வாழ்வு இனிக்க செய்யும் விதமாக உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது திமுக தலைமையிலான தமிழக அரசு. அமைப்புசாரா தொழிலாளர்களான உப்பளத் தொழிலாளர்களுக்காக தனி நல வாரியம் அதாவது, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம் 1982ன் கீழ் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது.

இனி நல வாரிய உறுப்பினர்களும் கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகையையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரு மூச்சு விட்டத் தொழிலாளர்கள் உடனடியாக அரசு நடைமுறைப்படுத்தும் என எண்ணினர். ஆனால், 4 மாதங்கள் காலம் ஆகியும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனை கிடப்பில் போட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து உப்பளத் தொழிலாளி ராமலெட்சுமி ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பேட்டியில், “ஐந்து வருடங்களாக உப்பளத் தொழில் பார்த்து வருகிறேன். பெண்களாகிய நாங்கள் அதிக எடை கொண்ட உப்பை சுமப்பதினால் கர்ப்பப்பை இறக்கம், நீர்ப்பை இறக்கம் என்ற பிரச்னை வருகிறது. இதனால் நீண்ட காலமாக தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இதுவரை அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்பளப் பகுதிகளில் அரசு, மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் அமைத்தால் கூட நன்றாக இருக்கும். மேலும், அடிப்படை வசதியான, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி கிடையாது. அதனால் அரசு தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கண்டிப்பாக அமைத்துத் தரவேண்டும் என்று உத்தரவு போடும் பட்சத்தில் முதலாளிகள் அதனை செய்து தருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982ன் கீழ் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் காலம் ஆகியும் தனி நலவாரியம் அமைப்பதற்கான ஒரு முயற்சி என்பது ஒரு தொய்வாகவே இருக்கிறது.

குறிப்பாக, தனி நல வாரியம் என்பது பொருளாதார பங்களிப்போடு இருக்க வேண்டும். குறிப்பாக, உப்பு என்பது 14 ஆயிரம் பொருள்களின் உட்பொருளாக்கும். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உப்பளத் தொழிலில் குறிப்பாக, லெவி முறை அமல்படுத்த வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் எவ்வாறு லெவி முறைகள் வகுக்கப்பட்டு செயல்படுகிறதோ அதே போன்று உப்பளத் தொழிலாளர்களுக்கும் லெவி முறைகள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 40 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு 60 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் குறிப்பிட்ட இரண்டு விழுக்காடாவது லெவிமுறைகள் வகுக்கப்பட்டு இந்த வாரியம் பொருளாதார பங்கெடுப்போடு நிதி ஆதாரத்துடன் செயல்பட்டால் உப்பளத் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பான திட்டங்களை முழுமையாக கிடைக்க செய்யலாம்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் திமுக அரசு வழங்கியது. ஆனால் மழை கால நிவாரணம் என்பது குடும்பத்தில் ஒருத்தருக்கு தான் எனக் கூறுகின்றனர்.

அதனை கைவிட்டு உப்பளத் தொழிலில் இருக்கக் கூடிய அனைவருக்கும் மழை கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பளங்களில் தொழிலாளர்களின் வாழ்வாதார வாழ்க்கை என்பது தனி நல வாரியத்தில் அத்தனை அம்ச திட்டங்களும் குழந்தைகளுடைய கல்வி முதற்கொண்டு குடியிருப்பு உட்பட அத்தனையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க:தமிழ் ஆய்வு மையம் அமைக்க JNU வரலாற்று ஆய்வு நூலகத்தை இடமாற்றம் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details