'மேலே உயரே உச்சியிலே' - லீவு எடுக்காத மாணவர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற ஆசிரியை தூத்துக்குடி பாரதியார் வித்யாலயா பள்ளியில் பணிபுரிந்து வருபவர், பட்டதாரி ஆசிரியர் ரமா. இவர், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை, சென்னைக்கு விமானம் மூலம் சுற்றுலா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனையடுத்து, பள்ளி மாணவர்களும் விடுப்பு எடுக்காமல் வந்தனர். இதையடுத்து வாக்குறுதி அளித்தபடி மாணவர்களை சென்னைக்கு அழைத்துச் செல்வது என முடிவு எடுத்து பள்ளிச்செயலாளர் ஏபிசிவி சண்முகத்துடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு அனுமதி வழங்கிய செயலாளர் மாணவர்களுக்கான பயணச் செலவில் பள்ளி நிர்வாகம் பங்களிப்பதாக கூறினார்.
மேலும், ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார். இதையடுத்து விடுமுறை எடுக்காத 12 மாணவர்களும் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றனர். அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரினா கடற்கரை, முதலமைச்சரின் நலத்திட்ட புகைப்பட கண்காட்சியையும் கண்டுகளித்தனர். பின்னர் முத்துநகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர்.
இதையும் படிங்க:பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை முன்னேற்றம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!