தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் சேட்டிலைட் போன்... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வந்த தகவல்.. பதறிய அலுவலர்கள்.. இரவோடு இரவாக பறிமுதல் - சாட்டிலைட் போன்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடிக்கு வந்த பார்ஜர் கப்பலில்  பயன்படுத்தப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்!
தூத்துக்குடிக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்!

By

Published : Jul 1, 2022, 4:00 PM IST

தூத்துக்குடி: நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில பொருட்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது. அந்த வகையில் ப்ரீபெய்டு வகையைச் சேர்ந்த துரையா என்னும் 'சேட்டிலைட் போன்'களை எளிதில் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் துரையா சேட்டிலைட் போன்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

அதேநேரத்தில் இந்த போன்களை மற்ற நாடுகளில் பயன்படுத்துவதற்குத் தடை இல்லை என்பதால் கப்பல்களில் மாலுமிகள் அவற்றை வைத்திருப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்திய எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அதனை மீறி பயன்படுத்தும்போது அவற்றைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு 'ஓஜாஸ் பிரைடு' என்ற பார்ஜர் கப்பல் கடந்த 27ஆம் தேதி வந்தது. இதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 3 பேர், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர், மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 மாலுமிகள் இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து கற்களை மாலத்தீவுக்கு ஏற்றி செல்வதற்காக வந்திருந்த அந்த கப்பல் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கப்பலில் உள்ள ஒரு இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் கப்பல் கேப்டன், பார்ஜர் கப்பலின் உரிமையாளர் மற்றும் முகவரை தொடர்பு கொள்வதற்காக 'துரையா' சேட்டிலைட் போனை பயன்படுத்தி உள்ளார். அதைப் பயன்படுத்தியதன் சிக்னல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தில் பதிவானது.

இதுகுறித்து உயர் அலுவலர்கள் உடனடியாக தூத்துக்குடி கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று இரவு கடலோர காவல் படையினரும், சுங்கத்துறை அலுவலர்களும் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் புறப்பட்டு, நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த அந்த பார்ஜர் கப்பலுக்குச் சென்றனர்.

தூத்துக்குடிக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட சேட்டிலைட் போன் பறிமுதல்!

அங்கு தீவிர விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பிரதமரிடம் விருது பெற்ற விருதுநகர் ஆட்சியர்..

ABOUT THE AUTHOR

...view details