சர்க்கரைப் பொங்கல் முதல் நகை வரை திருடிய பலே திருடனைப் பிடித்த மக்கள் தூத்துக்குடி: சர்க்கரைப் பொங்கல் முதல் நகை பணம் வரை திருடிய கில்லாடி திருடனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சென்னையில் குடியிருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அக்குடும்பத்தினரின் சொந்த ஊரான நரையன்குடியிருப்பில் அவர்களது மகன், அவரது பாட்டி வீட்டில் இருந்து பள்ளிப்படிப்பை படித்து வந்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்திய அந்த இளைஞன் சிறுவயது முதலே நரையன்குடியிருப்புப் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, செந்தாமரை என்பவரது வீட்டில் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடியுள்ளான். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த திருநாமக்கனி என்பவரது, வீட்டில் ஏடிஎம் கார்டை திருடி, அதிலிருந்த பணத்தை எடுத்துள்ளான். மேலும் வீட்டில் வைத்திருந்த சுமார் 7,500 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகாவிற்கு கடலை மிட்டாய் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற அந்த சிறுவன் அங்கு தனது கைவரிசையை காட்டி தான் வேலை பார்த்த இடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு, கர்நாடக மாநிலம், மாண்டியா போலீசில் மாட்டிக்கொண்டார். பின்னர் நான்கு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய இளைஞன் நேற்று முன்தினம்(ஜன.11) நரையன்குடியிருப்புபகுதியைச் சேர்ந்த திருநாமக்கனி வீட்டில் மீண்டும் செல்போன் ஒன்றை ஆட்டையைப் போட்டுள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் திருடனைப் பிடிக்க உஷாராக இருந்துள்ள நிலையில் மதில் ஏறி குதித்து ஒரு வீட்டில் திருட முயன்றபோது பொதுமக்கள் இளைஞனை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதே நபர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு நரையன்குடியிருப்பு காட்டுப் பகுதியில் உள்ள அய்யன் கோயில் உண்டியலை திருடும்போது பொதுமக்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா!