தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஹரிஹரன். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி அதே பகுதியில் இயங்கும் அரசு தொழில்நுட்ப பயற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இது குறித்து பயற்சி மைய முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் துறையினர் ஹரிஹரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வழக்கில் இருந்து ஜாமின் வழங்க வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஹரிஹரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரர் ஹரிஹரன் தினமும் காலை 10 மணிக்கு அரசு தொழில் பயிற்சி மையத்திற்கு சென்று மூன்று மரக்கன்று வீதம் 10 நாட்களுக்கு நட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.