தூத்துக்குடி:ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தால் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்த நிறுவனம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பொதுமக்கள், போக்குவரத்து தொழிலை சார்ந்தவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சார்ந்தவர்கள் என பல தரப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமும் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனு அளித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்காக திறக்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த வாரம் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு வெளிநாட்டு சதி தான் காரணம்.
இந்தப் போராட்டத்திற்காக வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர், ஸ்டெர்லைட் ஆதரவு தொண்டு நிறுவனத்தினர், மீனவ பிரதிநிதிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கம் தலைவர் நிக்கோலஸ் ஆகியோர் கூறுகையில், “திரேஸ்புரம் மக்கள் படிப்பறிவு அல்லாத சமுதாய மக்கள் என்பதால் போராட்டக் குழுவினர் எங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் கழிவுநீர் வருகிறது. கடலில் கலக்கிறது, மீன்கள் சாகிறது என்று சொல்லி மூளை சலவை செய்து போராட்டம் செய்ய வைத்தனர்.
அதில், நானும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டேன். எங்களை தூண்டி விட்ட போராட்டக் குழுவினர் பாதியில் நின்று விட்டனர். மக்களை திரட்டி போராட்டம் நடத்திய யாரும் காயப்படவில்லை, சாகவில்லை. இவர்கள் சதியால் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்துவிட்டனர். வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி எங்களை முட்டாளாக்கி விட்டதாக கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தான் எங்களுடைய சந்ததிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவே அந்த ஆலை திறக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.