தூத்துக்குடி: தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் தருவைக்குளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடல் தொழிலை நம்பி மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தருவைக்குளத்தில் இருந்து வெள்ளப்பட்டி வழியாக மீனவர்கள் மீனை கொண்டு செல்ல ஏதுவாக தார்ச்சாலையானது ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையானது, பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையாகும். அதாவது, மெயின் ரோட்டில் கடலில் பிடித்த மீன்களை வாகனத்தில் கொண்டுசெல்லும்போது அந்த கழிவு நீர் சாலையில் விழுந்து, அந்தச் சாலை வழியாகப்போகும் வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது. மேலும் மீன்களை உடனடியாக மீன் ஏல கூடத்திற்குச் சென்று சேர்க்க வசதியாகவும் இந்த சாலையை மத்திய அரசானது, மீனவர்களுக்கென்று பிரத்யேகமாக 5 கிலோ மீட்டர் தூரம் அமைத்தது.
இந்தச் சாலையை இணைக்கும் தாம்போதி பாலமானது 1 வருடகாலமாக கடல் நீரில் மூழ்கியவாறே உள்ளது. அமாவாசை, பௌா்ணமி காலங்களில் கடல் நீரானது, பெருக்கெடுத்து வரும். அப்போது அந்த தாம்போதி பாலத்தின் மேல் மட்டம் வரை வரும் தண்ணீர் முழுவதுமாக மூழ்கும். ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி விடும்.
தற்போது இந்தப் பாலத்தில், கிட்டத்தட்ட கடந்த 1 வருடகாலமாக அந்த கடல் நீர் மற்றும் கழிவு நீரானது அங்கேயே சூழ்ந்து கொண்டு பாசி படர்ந்து, துர்நாற்றம் வீசி, அந்த சாலையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.