தூத்துக்குடி:தமிழ்நாடு அரசு சொத்து வரியைக் குறைக்கவும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2,000 குடும்பங்கள் பயன்பெறும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தினர் வ.உ.சி சாலையில் கூட்டாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் நிறுவனர் சந்திரன் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’தமிழ்நாடு அரசு சொத்து வரியை 10% குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடுமையான மின் கட்டண உயர்வால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அனல் மின்சாரமும், அணு மின்சாரமும், காற்றாலை மின்சாரமும் தயார் செய்யப்பட்டும் வழங்கலாம். இதன்மூலம், தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கணக்கீடு செய்வதை மாற்றி, பிற மாநிலங்களில் வீட்டு உபயோக மின்சாரம் 300 யூனிட் இலவசமாக கணக்கீடு செய்வதுபோல், தமிழ்நாட்டிலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 300 யூனிட் இலவச கணக்கீடு செய்ய வேண்டும்.
அணு மின்சாரம் தயார் செய்யும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், அணு மின் உலை ஆபத்தைத் துணிவாக எதிர்கொள்ளும் தமிழ்நாடு மக்களுக்கு அவர்களின் வீட்டு உபயோக மின் இணைப்பில் 300 யூனிட் இலவச கணக்கீடு செய்வதற்கு மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.