தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழக அரசியல் கட்சிகளின் முடிவு ஒருதலைபட்சம்’ - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் பேட்டி! - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர், “தமிழக அரசியல் கட்சிகளின் முடிவு ஒருதலைபட்சமானது” என விமர்சித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் பேட்டி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் பேட்டி

By

Published : Apr 28, 2021, 8:40 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி பண்டாரம்பட்டி கிராம மக்கள் நேற்று (ஏப்.27) மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு ஆட்சியரிடம் மனு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (ஏப்.28) பண்டாரம்பட்டி, மீளவிட்டான், பாரதி நகர், வி.எம்.எஸ்.நகர், பனிமய நகர், குரும்பூர், முத்தையாபுரம், சில்வர் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் வழக்கறிஞர் ஹரிராகவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை புறவாசல் வழியாக உள்ளே நுழைய முயற்சிக்கிறது. நோய் பரவலை பயன்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளும் ஒருதலைபட்சமான முடிவை எடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கூட்டமைப்பினர்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளான நாம் தமிழர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதர கட்சிகளைக் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளனர். மேலும் அதை நீதிமன்றத்திற்கு அறிக்கையாக சமர்பித்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்து, மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவெடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதை மக்கள் விரும்பவில்லை. ஆக்ஸிஜன் தயாரிப்பது குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் கடந்த 26ஆம் தேதி வாதாடினார். அதில் ஸ்டெர்லைட் ஆலையில் முப்பத்தைந்து டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அதையும் சரியான முறையில் தயாரிப்பதற்கு ஒன்பது மாதங்கள் ஆகும். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மருத்துவ ரீதியாக பயன்படுத்த முடியாது. அதனை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

தமிழக அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்த இந்த வாதத்தை, ஏன் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கவில்லை? ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இனி அமையப் போகின்ற அரசாங்கமும் மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. மக்களின் நோக்கத்தின் படி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைய தினம் தூத்துக்குடியில் கருப்பு நாளாக அனுசரிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து நாளை வீடுகள் முன்பு கோலமிட வேண்டும். வீடுகள், தெருக்களில் கருப்புக் கொடி கட்ட வேண்டும். வேலைக்கு செல்வோர் நாளை (ஏப். 29) கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்ல வேண்டும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை (ஏப். 29) மாலை மூன்று மணி நேரம் மட்டும் கருப்பு நிறத்தினை சுயவிவர படமாக வைக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : தமிழ்நாடு ஆளுநருடன் தலைமைச் செயலர், டிஜிபி சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details