தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலத்தீவில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் விடுவிப்பு

தூத்துக்குடி: மாலத்தீவில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டு மார்ச் 14ஆம் தேதி சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.

fishermen
fishermen

By

Published : Mar 9, 2021, 10:27 PM IST

தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரத்தைச் சேர்ந்த அந்தோணி மைக்கேல் பாரத், ஜான் சாமுவேல், அந்தோணி அருள்ராஜ், கனகராஜ், அபிஷேக் ராஜ், வெள்ளப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி ராபின், ராமநாதபுரம் நரிப்பையூரைச் சேர்ந்த ஜெபமாலை ராஜ், இருதயராஜ் ஆகிய எட்டு பேரும் தருவைகுளத்தைச் சேர்ந்த ஒருவரின் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றனர். இதனால் மாலத்தீவு கடற்படையினர் எட்டு மீனவர்களையும் கைதுசெய்து அவர்களது படகையும் பறிமுதல்செய்தனர்.

இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் மாலத்தீவில் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சினையை மாநில அரசின் மூலம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றார். இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் எட்டு மீனவர்களையும், படகையும் மாலத்தீவு அரசு இன்று (மார்ச் 9) விடுவித்தது.

8 மீனவர்களும் தங்களது விசைப்படகில், மாலத்தீவின் குல்குதுபுஷி தீவுப் பகுதியிலிருந்து இன்று (மார்ச் 9) மதியம் 12.05 மணியளவில் கிளம்பினர். இந்திய எல்லை வரை மாலத்தீவு கடலோரக் காவல் படையினர் உடன் வந்தனர். இந்த மீனவர்கள் மார்ச் 14ஆம் தேதி தருவைகுளம் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details