தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் நிர்வாகிகள், தூத்துக்குடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த ஸ்டெர்லைட் ஆலை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீண்டும் திறக்கும் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் மூலமாக ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி, நிரந்தர தொழிலாளர்கள், மறைமுக தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்பட 10,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் துறைமுகத்திற்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல சுங்கத்துறை, வருமான வரித்துறை, ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தினர், லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்பு அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதன்படி யாருக்கும் எவ்வித வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரியவில்லை.