தூத்துக்குடி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று (செப்.2) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதன் ஒரு பகுதியாக பிற்பகலில் திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதில் பெண்கள் மேம்பாடு, சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் இன்றைய சமூக நிலை, பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து பேசினார்.
மாணவன் கேள்வி
அப்பொழுது கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் பொதுத்துறை பங்குகளை மத்திய அரசு விற்பதன் மூலம் அரசுக்கு என்ன வருவாய் கிடைக்கும்? பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வேலையை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்?.
பிஎஸ்என்எல் உதாரணமும், விளக்கமும்
இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, "பொதுத்துறைகளை விற்பது என்பது முழுமையாக விற்பதன்று. உதாரணமாக பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில அமைச்சர்கள் அரசியல் காரணங்களுக்காக சில தனியார் நிறுவனங்களை லாபப்படுத்த தொழில்நுட்ப வசதிகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தர மறுத்துவிட்டனர்.
இதன் காரணமாக பிஎஸ்என்எல்லின் வளர்ச்சி பின்னடைந்து விட்டது. தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் சேவைக்கு 4ஜி இணையதள சேவை என்பதே கிடையாது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதன் காரணமாகவே அதிலிருந்து வெளியேறி விட்டனர்.
மாணவனின் கேள்விக்கு அண்ணாமலை பதில் பிரதமர் மோடி தற்போது பொதுத்துறை நிறுவனங்களை சுத்தப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்திலேயே நல்ல வேலைவாய்ப்புகள் உருவாக்கி தர முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே லாபம் ஈட்டும் நோக்கத்தோடு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க:மோசடி வழக்கு: காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த ஆர்யா - வழக்கு செல்லும் பாதை என்ன?