தூத்துக்குடி:கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு விவசாயிகள் பிரச்சனைகள் கேட்டறிந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "தென்மேற்கு பருவ மழை பெய்தும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பவில்லை. இந்த மாவட்டங்களை அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி நீர் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியை மையமாக கொண்டு மத்திய அரசு ஏற்றுமதி முனையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான பல மறைமுக சதி நடைபெறுவதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதனை நிரந்தரமாக கடந்த ஆட்சி மூடியிருக்கிறது. அது தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மையை அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது என்பது மிகப்பெரிய துரோக செயல். இது தொழில் அல்ல. மக்களுக்கு உணவு கொடுப்பதற்கான சேவை. இதனை இலவசம் என கூறுவது பிற்போக்குத்தனமானது.
கேரளாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் முல்லை பெரியாறு தவிர்த்து மற்ற நதிநீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தவும் முதல்வர் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழு திமுக அரசு வந்தபின்னர் செயல்படவே இல்லை. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் நதியில் இருந்து வெளியேறும் நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆனால், தமிழ்நாட்டை நோக்கி வரும் ஆறுகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பாயும் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாமிரபரணியின் தண்ணீரைக் கொண்டு கடலில் விடுகிறோம். அந்த தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள குளங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலைதான் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இருப்பதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்த 3 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. அணைகளில் நிரம்ப கூடிய நீர் கடலுக்கு செல்கிறது. இதைவிட வெட்கக்கேடு வேறெங்கும் உண்டா? விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம். ஆனால், எழுத்துப்பூர்வமாக காகிதத்தில் தாக்கல் செய்ததால் மட்டும் விவசாயம் வளர்ந்துவிடாது. இதற்கு முன்னதாகவே அவர்கள் தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 விலை தருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முடியப்போகிறது.