தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்கும் பணிக்காகத் திறக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அழைப்பு பெறாத பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள், வேன் ஒன்றில் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்துள்ளனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்கள், அவர்களை வேனிலிருந்து இறங்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். அப்போது கூட்டத்திலிருந்த நபர் ஒருவர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்களின் மீது கல் வீசியதால் பரபரப்பு நிலவியது.
ஸ்டெர்லைட் ஆலை கருத்துக்கேட்பு கூட்டம்: ஆதரவாளரை சுற்றிவளைத்த எதிர்ப்பாளர்கள் இதையடுத்து, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர், கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஆதரவாளர்களை, பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர், மக்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என தகவல் வந்ததையடுத்து, அமைப்பு ஒன்றுக்கு தலா 3 பேரை உள்ளே அனுமதித்தனர்.
பின்னர், கூட்டம் முடிந்து ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஆட்சியர் அலுவலகத்தைவிட்டு வெளியே வரத் தொடங்கினர். அப்போது, ஸ்டெர்லைட் ஆதரவாளர் ஒருவர், நாடு நலம் பெற வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால்தான் பொருளாதார முன்னேற்றம் அடையும் என கூறினார்.
இதைக்கேட்ட எதிர்ப்பாளர்கள் அவரை விரட்டியடிக்க ஓடிவந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவர்களைத் தடுத்து, ஆதரவாளர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பிரபல எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: நிறுவனத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்!