தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனத்தினர் ஆகியோர் கரோனா தடுப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடிக்கு உட்பட்ட பண்டாரம்பட்டியில் கடந்த மே 1ஆம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, லாரிகளில் பொருள்களைக் கொண்டுவந்து இறக்கியதாகத் தெரிகிறது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முற்பட்டதாக ஸ்டெர்லைட் ஆலை சார்பில் கொண்டுவரப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து, தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காவல் துறையின் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து பண்டாரம்பட்டியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.