தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பளித்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இது குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் கூறியதாவது, "நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, ஆலை மீதான தடை தொடரும் என கூறியிருப்பது சாதகமான தீர்ப்பு. இதற்காக உழைத்த அத்தனை வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
ஸ்டெர்லைட் போராளிகளில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, "தூத்துக்குடியின் நிலம், நீர், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என மக்கள் போராடி வந்தனர். 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதியன்று ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தூத்துக்குடி மண்ணிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கற்கள் அகற்றப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது. ஸ்டெர்லைட் போன்ற உயர் நச்சு ஆலைகள் எவற்றுக்கும் இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.