தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் நிர்வாகிகள் தூத்துக்குடியில் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., "இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கக் கூடிய மக்கள் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறுவதற்காக என்னை சந்தித்தார்கள். நிச்சயமாக அவர்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்து செல்வேன்.
முன்னதாக, தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்களை சந்தித்து குறைகளை கேட்ட போது, அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். நிச்சயம் பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து திமுக, ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.சில பேருக்கு சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான விருப்பம் இருக்கிறது. அதுவும் பரிசீலிக்கப்பட வேண்டும்.