தூத்துக்குடி: ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து மீட்கப்பட்ட 649 பயணிகள் பேருந்து மூலம் வாஞ்சி மணியாச்சி வந்து சேர்ந்ததையடுத்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்த சிறப்பு ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இன்று (டிச.19) இரவு ௧௦ மணிக்குப் புறப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி அன்று கனமழை பெய்ததால் பல பகுதிகளில் ரயில் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. அதனால் அந்தப் பகுதிகளில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் திடீர் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் அபாயகரமான அளவில் ஓடியதையடுத்து, டிசம்பர் 17ஆம் தேதி அன்று திருச்செந்தூர் - சென்னை இடையே செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு நிலையில், ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளில் 300பயணிகள் மீட்கப்பட்டு அருகிலிருந்த பள்ளியில் தங்கவைக்கப்பட்ட நிலையில், சாலைகளில் ஏற்பட்ட பாதிப்பினால் மீதமிருந்த பயணிகள் மழை வெள்ளம் குறையும் வரை ரயிலிலே காத்திருக்க நேரிட்டது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 18ஆம் தேதி அன்று அதிக மழை வெள்ளம் காரணமாக ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையம் தனித்தீவு போலக் காட்சியளித்தது. தேசிய மாநில பேரிடர் மீட்புக் குழுவினரால் கூட ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்திற்குச் சென்று சேர இயலாத நிலை உருவானது.
மோசமான வானிலை மற்றும் இருள் சூழல் காரணமாக டிசம்பர் 18 அன்று மாலை மீட்புப் பணிக்குப் புறப்பட்டுச்சென்ற கோவை சூலூர் விமானப்படை ஹெலிகாப்டரும் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தை அணுக முடியவில்லை. உள்ளூர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அவர்களின் சொந்த முயற்சியில் ரயில் நிலையம் மற்றும் பள்ளியில் பரிதவித்த பயணிகளுக்கு உணவு, பால் மற்றும் குடிநீர் வழங்கி உதவினர். இறுதியாக டிசம்பர் 18 அன்று இரவு திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 2 வர்த்தக ஆய்வாளர்கள் லாரி, வேன் என சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வாகனங்களில் ரயில் நிலையம் அருகே சென்று சேர்ந்தனர்.