தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் இப்படி ஒரு சுற்றுலாத் தலமா? சிறப்பாகத் தயாராகும் தருவைகுளம் கடற்கரை! - தூத்துக்குடியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம்

தூத்துக்குடியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் தருவைகுளம் சூழல்சார் சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுவருகிறது. கண்ணாடி இழை படகில் சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் அழைத்துச் சென்று கடல்வாழ் உயிரினங்களை நேரடியாகக் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

தருவைகுளம் கடற்கரை
தருவைகுளம் கடற்கரை

By

Published : Jan 12, 2022, 3:06 PM IST

Updated : Jan 13, 2022, 5:41 PM IST

தூத்துக்குடி: அரசின் நிதி வருவாய்க்கு மற்ற அரசு துறைகளுக்கு இணையாக வசூல் ஈட்டித்தருவது சுற்றுலாத் துறை. தமிழ்நாட்டின் தொன்மையான வரலாறும் அது சார்ந்த இடங்களும் சுற்றுலாத் தலங்களாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையின்போது நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவித்துவருகிறது.

காலநிலைக்கு ஏற்ப சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் வரிசையில் சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம் கடற்கரை, கோடை காலத்திற்கு ஏற்ற இடமான ஊட்டி, கொடைக்கானல் எனப் பல உள்ளன. அதற்கு அடுத்ததாக ஆன்மிகத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களை ஒருங்கே பெற்றுள்ள மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக அளவில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மணப்பாடு கடற்கரை, பசுமை பூங்கா, கழுகுமலை குடவரை கோயில், மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம், முயல் தீவு, வ.உ. சிதம்பரனார் துறைமுகம் உள்பட பல்வேறு சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது.

தருவைகுளம் கடற்கரை

இந்நிலையில் மாவட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையிலும், புதிய அடையாளமாக தருவைகுளம் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களின் வரிசையில் தற்பொழுது இடம்பிடித்துள்ளது.

அரசின் நேரடி தலையீடின்றி முதல் பூங்கா

வனத் துறை சார்பில் தேசிய அளவில் நடந்தப்பட்ட ஆய்வுப் பட்டியலில் சிறந்த சூழல் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்க சுற்றுலாத் தலமாக தருவைகுளம் கடற்கரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது இந்தப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் தருவைகுளம் கடற்கரை சூழல் சார்ந்த சுற்றுலாத் தளமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

தருவைகுளம் கடற்கரை

இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வன அலுவலர் கூறுகையில், "தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நேரடியாக அரசின் தலையீடின்றி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்விதமாக சமூக வளர்ச்சி கண்ணோட்டத்தோடு தருவைகுளம் சூழல்சார் பல்லுயிர் பெருக்க சுற்றுலா கடற்கரை பூங்கா செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தருவைகுளம் கடற்கரை முழுவதுமாக கிராம குழுவினர் மூலமாக நிர்வகிக்கப்படும். கடற்கரைப் பூங்கா நிர்வாகக் குழுவில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.

இவர்கள், வனத் துறையின் சார்பில் சுற்றுலாவை மேம்படுத்த செய்ய வேண்டிய பணிகள், அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெற்றுத் தருவதிலும் நிர்வாகக் குழுவுக்கும், அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவார்கள்.

கடலுக்குள் சுற்றுலா செல்ல ஏற்பாடு

தருவைகுளம் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தும்வகையில் குறைந்த கட்டணத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தருவைகுளம் கடற்கரை

தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதியில் வளரும் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் புற்கள், கடல் விலாங்கு, கடற்குதிரை, சிங்கி இறால், மெல்லுடலிகள் உள்பட பல்வேறு வகை உயிரினங்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் கண்டுகளிக்கும் வகையில் படகின் அடிப்பாகத்தில் கண்ணாடி இழை பொருத்தப்பட்டு கடலுக்குள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகப் பாதுகாப்பு கவசங்கள், பிரத்யேக படகுகள் வாங்கப்பட்டுள்ளன.

மேலும் கடற்கரையில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும்விதமாக தருவைகுளம் கடற்கரை முழுவதும் நெகிழிப் பயன்பாடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாக்கு மட்டையிலான தட்டுகள் வழங்கப்பட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட உள்ளன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நீர் பாட்டில்களுக்கும் தருவைகுளம் கடற்கரையில் அனுமதி மறுக்கப்படுகிறது.

ஸ்கூபா டைவிங், கிளைடிங் அனுபவம்

இதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைக்காத உலோகத்தினாலான நீர் கேன்கள் பூங்கா நிர்வாகக் குழுவினரால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. கடற்கரைப் பகுதியை அழகுப்படுத்துவதற்காக பாதாம், சவுக்கு, பிசின், ஊசியிலை மரங்கள் நடப்பட்டு பசுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகச் செயல்பாடுகள், கடலுக்குள் இருக்கும் அரியவகை உயிரினங்கள், பவளப்பாறைகள் குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் பட விளக்க பயிலரங்கம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், சமூக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்குப் பொதுமக்கள் தரும் வரவேற்பைப் பொருத்து நன்கு பயிற்சிபெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடலுக்குள் ஸ்நார்க்கிளிங், ஸ்கூபா டைவிங், கிளைடிங் போன்ற அனுபவங்களைத் தர திட்டமிட்டுள்ளோம். மேலும் கடற்கரைக்கு அருகே உள்ள தீவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லவும் திட்டங்கள் உள்ளன.

இதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாவுக்கு தகுந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

சுற்றுலாவின் மூலமாக அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவது மட்டுமின்றி சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும் கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்குமான முயற்சியாக இது அமையும்" எனத் தெரிவித்தார்.

தருவைகுளம் சூழல்சார் கடற்கரைப் பூங்கா அமைக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்கா செயல்பாட்டுக்கு வருவதை அப்பகுதி மக்களோடு, சுற்றுலாப் பயணிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: Special அழிக்கப்படும் பனைமரங்கள் - இயற்கைச் சீற்றங்களுக்கு வழிவகுக்கப்படுகிறதா?

Last Updated : Jan 13, 2022, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details