அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ளது "அம்பாள் கோசாலை". சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பசுமை சூழல் சார்ந்த இடமாக முற்றிலும் ஆர்கானிக் விவசாய பண்ணையாக இது உருவெடுத்து நிற்கிறது. பசுமை பண்ணையின் முகப்பிலேயே வருவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பறவைகளுக்கான வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. அகன்று விரிந்த பண்ணையின் இடது பக்கமாக மாட்டுப் பண்ணையும், வலதுபுறமாக ஆட்டுப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.
மாட்டுப் பண்ணையை தொடர்ந்து பயோ-கேஸ் உற்பத்தி செய்யும் வளாகம், அதையடுத்து மின்சாரம் பிரித்தெடுக்கும் பகுதி, அதையடுத்து பனைத் தோப்பு, கருப்பட்டி காய்ச்சும் பகுதி, பாலிஹவுஸ், இயற்கை சாண உரம் தயாரிக்கும் பகுதி, கொய்யா சாகுபடி, மேய்ச்சலுக்கான இடம், வாத்துக்குட்டை என அடுக்கடுக்கான அமைப்புகள் நம்மை கண்ணுயரச் செய்கிறன.
பொதுவாக ஆள், படை, பலம், அம்பாரி, அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அலட்டலாய் வலம்வரும் நிலையில் அவர்களுக்கு மத்தியில், ஓசையின்றி எளிமையாய், தன்னைச் சேர்ந்தோர்க்கு, தான் உருவாக்கியிருக்கும் "அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை" மூலமாக உணவு, உறையுள், மின்சாரம், எரிவாயு, பணம் என உயிர்வாழ தேவையான அனைத்தும் மறுக்காமல் வழங்கிவருகிறார்" முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன்.
தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன். அரசியல் பிரமுகர். அதிமுக கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்தவர். 10 ஆண்டுகள் புதூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், 5 ஆண்டுகள் விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏவாகவும் பணியாற்றியுள்ள இவர் அடிப்படையில் ஒரு விவசாயி.
தன் பண்ணையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அவரிடம் மானாவாரி பகுதியான விளாத்திகுளத்தில் 20 ஏக்கர் பரப்பை இயற்கை வேளாண் பகுதியாக சாத்தியப்படுத்தியது குறித்து கேட்டோம்.
கறவை மாடுகள்:
"அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். ஆகவே எனக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு இருந்தது. நான் வழக்கறிஞர் படிப்பை முடித்த பின்னர் விவசாயம் சார்ந்து பணிகளில் ஈடுபட விரும்பினேன். எனவே இதுகுறித்து யோசிக்கும்போது எனது மகன் கொடுத்த ஆலோசனைபடி 2012ல் இயற்கை மாட்டுப்பண்ணையாக ஆரம்பித்ததுதான் அம்பாள் கோசாலை.
ஆரம்பத்தில் 250க்கும் மேற்பட்ட பசு மாடுகள் வைத்து பண்ணை நடத்திவந்தேன். பின்னாளில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்தேன். தற்பொழுது கோசாலையில் கிர், ஜெர்ஸி, நாட்டு மாடு, சிந்து கலப்பினமாடுகள் என 30க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கட்டப்பட்டுள்ளன.
மாடுகளை கட்டுவதற்கு ஏதுவாக ஓடுகளால் வேயப்பட்ட கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. பசு மாடுகள் பொதுவாக வெப்பத்தை அதிகம் தாங்காது. தூத்துக்குடி மாவட்டம் வெப்பமான பகுதி என்பதால் மாடுகளுக்கு உடல் உஷ்ணம் சம்பந்தமான நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கொட்டகையினுள் 15 மின் விசிறிகளை அமைத்துள்ளேன். இதுபோக உடல் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் தானியங்கி நீர் தெளிப்பானும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மாடுகள் சிமெண்ட் தரையில் அமர்ந்து எழுந்திருக்கும்பொழுது தரையில் மோதி கால்களில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாடுகளுக்கு இதுமாதிரியான பிரச்னைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிமெண்ட் தரையின் மேலே ரப்பர் சீட்டுகள் போடப்பட்டுள்ளன.
இதனால் அவைகளுக்கு ஒருவித சொகுசு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாடுகளுக்கு தினமும் ஐந்து வேளை கம்பு, சோளம், புண்ணாக்கு கலந்த அடர் தீவனமும், 50 விழுக்காடு பசுந்தீவனமும் உணவாக வழங்கப்படுகிறது. மாட்டுச்சாணம், மாட்டு சிறுநீர் உள்ளிட்டவை எதுவும் வீணாக்கப்படாமல் அவற்றை எரிவாயுவாக மாற்றுவதற்கும் இங்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாடுகள் ஒவ்வொருமுறை கழிக்கும் சிறுநீரும் கொட்டகையினுள் அமைக்கப்பட்டிருக்கும் கால்வாய் வழியே பயோ-கேஸ் உற்பத்தி செய்யும் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. தினமும் 250 லிட்டர் கறக்கப்படும் பால் வீட்டுத் தேவை, பணியாளர்களின் தேவைக்கு போக மீதி வெளியே சில்லறை வியாபாரத்திற்காக கொடுக்கிறோம். பாலில் இருந்து நெய், வெண்ணை உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருள்களையும் இயற்கை முறையில் தயார்செய்கிறோம். இதன்மூலம் நாளொன்றுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
பரண் ஆடு வளர்ப்பு:
ஆடு வளர்ப்பு முறையில் பரண்மேல் ஆடு வளர்த்தலை கடைபிடித்துவருகிறேன். மூங்கில் கம்பால் வேயப்பட்ட பரண் அமைத்து அதை மூன்று பிரிவுகளாக்கி தரத்திற்கு ஏற்றவாறு 70 ஆட்டுக் குட்டிகளை பரணில் வளர்த்துவருகிறேன்.
சுற்றிலும் கம்பி வைத்து கட்டப்பட்ட வேலியில் ஆடுகளுக்கு தொட்டியில் அடர்தீவனம் வழங்கப்படுகிறது. ஆடுகள் இடும் புழுக்கைகள், சிறுநீர் போன்றவை பரண் இடுக்கு ஓட்டைகள் வழியே கீழே வந்து விழுகின்றன. இவை நொதியாகி உருவாகும் சிறு பூச்சிகள், புழுக்களை பண்ணையில் வளரும் 100 கோழிகள் சாப்பிடுகின்றன.
இங்கு நாட்டுக் கோழி, சேவல், கின்னி கோழி, வான்கோழி உள்ளிட்டவை வளர்ந்து வருகின்றன. இதனால் இயற்கையான உணவு சுழற்சி முறை நடைபெறுவதை நாம் பார்க்க முடியும். பண்ணையில் ஆடு, மாடுகளை பராமரிப்பதற்குத் தேவையான தண்ணீர்த் தொட்டி இதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 4000 மதிப்பில் கிடைக்கும் குட்டிகள் 10 மாதத்தில் ஈற்று நிலைக்கு வந்தபின் ரூ. 12, 000 வரை விலை போகும்.
பயோ-கேஸ், மின்சாரம் தயாரிப்பு:
தற்போது உள்ள சூழலுக்கு தற்சார்பு பொருளாதாரம் மிக தேவையானது. வெகு ஆண்டுகளுக்கு முன்பே தற்சார்பு பொருளாதாரத்தை குறித்து வலியுறுத்தியவர் ஜே.சி. குமரப்பா. அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயரில் தனி வளாகம் ஒன்றை ஒதுக்கி அங்கு பயோ-கேஸ், மின்சாரம் உற்பத்தி செய்துவருகிறேன்.