தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2020, 10:05 AM IST

Updated : May 2, 2020, 10:56 AM IST

ETV Bharat / state

உழைக்கிறதுதான் நிம்மதியா இருக்கு - ஊரடங்கில் பணியாற்றும் வாட்ச்மேன் தாத்தா!

தூத்துக்குடி: ஓய்வு ஒருபோதும் எனக்கு நிம்மதி தராது என உற்சாகமாகக் கூறும் வாட்ச்மேன் தாத்தாவின், ஊரடங்கு அனுபவம் குறித்த உணர்வுப்பூர்வமான சிறப்புத் தொகுப்பு.

ஜெகன்நாதன் தாத்தா
ஜெகன்நாதன் தாத்தா

வரலாற்றுக் குறிப்புகளின் கறுப்புப் பக்கங்களில் கரோனா பெருந்தொற்றிற்கு முக்கிய இடமுண்டு. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை கரோனா மனிதர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இந்தத் தருணத்தில், தங்கள் உயிரைப் பணயம்வைத்து பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்களின் எண்ணவோட்டம் முழுக்க, மக்கள் நலம்தான் பிரதானம்.

இதற்கிடையே, ஐடி போன்ற தொழில்துறைகள் வீட்டிலிருந்தே பணிசெய்ய ஏற்பாடுகள் செய்துள்ளன. இதனை, ’வொர்க் ஃபுரம் ஹோம்’ என்று ஆங்கில மிடுக்கில் இளையதலைமுறை சொல்லும் நேரத்தில், ’வொர்க் ஃபார் ஹோம்’ என்ற குரல் தனித்துநிற்கிறது.

ஊரடங்கில் பணியாற்றும் வாயிற்காவலர்கள்

கரோனாவுக்குப் பயந்து கதவடைத்துக் கொண்ட மக்களால், மயான அமைதியிலிருந்தது, தூத்துக்குடி. ஆனாலும், அங்கிருந்து ஒரு குரல் நம்மை ஈர்த்து திரும்பிப் பார்க்கவைத்தது. நீல நிறச்சட்டை, கருநீலத்தில் பேண்ட், கைக்கடிகாரம், கொஞ்சமும் அச்சமில்லாத கூர்மையான பார்வையென மருத்துவமனை வாசலில், மும்முரமாகப் பணியாற்றுகிறார், ஜெகன்நாதன் தாத்தா.

70 வயதிலும், கம்பீரமாக பிரபல தனியார் மருத்துவமனையின் இரண்டாம் வாயிற்கேட்டில், தனி ஆளாகப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்தார். யாருக்காக இந்தப் பணி, வயதான காலத்தில் வீட்டிலிலேயே ஓய்வெடுத்தால் கரோனாவிலிருந்து தப்பிக்கலாம்தானே, என மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம். தழுதழுத்தக் குரலில் ஜெகன்நாதன் தாத்தா பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில், “வாட்ச்மேன் வேலைக்கு வந்து 35 வருடமாகிறது‌. இதுவரை எனக்கு எந்த குறையுமில்லை. எனது பணியை நிறைவாகவே செய்கிறேன். கரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கில் பணியாற்றும் வாயிற்காவலர்கள்

கரோனாவை நினைத்து, எனக்குத் துளியும் பயமும் இல்லை. எப்போதும் ஆள்மாட்டமிருக்கும் சாலையில், வாட்ச்மேனாக பணியாற்றிவிட்டு, தற்போது வெறிச்சோடிய சாலையைப் பார்ப்பது சற்று அயர்ச்சியாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. கரோனா உயிர்க்கொல்லி நோய் என்ற விழிப்புணர்வு எனக்கும் உண்டு‌‌.

ஆனால், நான் இன்று வேலைக்கு வந்தால்தான், நாளை வீட்டிற்குத் தேவையானதை ஈட்ட முடியும். தனியாளாகப் பணியை மேற்கொள்வது சில சமயங்களில் கடினமானதாகயிருக்கும், மனஅழுத்தம்கூட ஏற்படும்.

அதையும், சமாளிக்க வேண்டிய தேவையிலிருக்கிறேன். என்னுடைய பிள்ளைகளுக்கு, திருமணமாகி தனிக்குடும்பமிருக்கிறது. அவரவர் குடும்பங்களை கவனித்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஒருபோதும் தொந்தரவாய் நானும், என் மனைவியும் இருக்கக்கூடாது. இதற்காகவே, வேலைக்கு வந்துவிட்டேன்” என வைராக்கியத்தோடு சொல்கிறார்.

உழைத்து பழக்கப்பட்ட என்னால் ஓய்வில் இருக்க முடியாது. ஒய்வு ஒருபோதும் எனக்கு நிம்மதி அளிக்காது. நான் விருப்பப்பட்டு பணிக்கு வருகிறேன். இந்த சூழலில், மருத்துவமனையில் காவலராக, மக்களுக்கு பணி செய்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது : ஜெகன்நாதன் தாத்தா

தொடர்ந்து, பணிச்சுமை குறித்து அவரிடம் கேட்கும்போது, “சுழற்சி முறையில்தான் வேலைபார்க்கிறோம். பகல் நேர பணி சுலபமாகயிருக்கும். இரவு நேரப்பணி சற்று கடினம். அதை, சக பணியாளர்களுடன் பேச்சுக் கொடுத்து சமாளிப்பேன்” என்றார்.

நிர்வாகத்தின் ஒத்துழைப்புதான் தொழிலாளர்களை மேம்பாடு அடையச் செய்யும். தொழிலாளர்களின் பணி சிறந்தால் நிர்வாகம் பலனடையும். ஜெகநாதன் தாத்தாவிற்கு நிர்வாகம் உதவுகிறதா? என வினவும்போது, ”நிர்வாகம் தற்போதுள்ள சூழலின் நெருக்கடியைப் புரிந்துகொண்டது.

ஊரடங்கில் பணியாற்றும் வாட்ச்மேன் தாத்தாவின் உணர்வுப் பூர்வமான சிறப்புத் தொகுப்பு

நான் யாருடன் சேர்ந்து பணியாற்றினால், வசதியாகயிருப்பேனோ அவர்களுடன்தான் பணிக்கு வருகிறேன். விருப்பமில்லாதவர்களுடன், நிலைமை சீரானதும் பணிக்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளது” என்றார்.

வயசான காலத்தில், நமக்கெதுக்கு ஊரடங்கு நேரத்தில் வேலை, எனப் பின்வாங்காமல், சமூகத்திற்காக ஒரு அடி முன்வந்து, பணியாற்றிக்கொண்டிருக்கும் ஜெகன்நாதன் தாத்தாவை, சமுதாயத்தின் சிறந்த முன்னோடி என்றே சொல்லலாம். ராணுவ வீரர்கள், காவலர்கள் அளிப்பது மட்டுமல்ல பாதுகாப்பு, வாயிற்காவலர்கள் கொடுப்பதும் பாதுகாப்புதான்.

இதையும் படிங்க: முகாமில் ஏற்பட்ட மனமாற்றம்... வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர ஆதரவற்றோர் கோரிக்கை!

Last Updated : May 2, 2020, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details