தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில், அதன் பரவலைத் தடுக்க கடந்த 18ஆம் தேதி 33 மாவட்டங்களுக்கு, 33 ஐஏஎஸ் அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்தது. அதனடிப்படையில், சிறப்பு அலுவலர்கள் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, அத்திமரப்பட்டி, சுனாமி காலனி, மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான டூவிபுரம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அலுவலர், "தூத்துக்குடியில் மொத்தம் 24 ஆயிரத்து 584 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 789 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 590 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 226 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தூத்துக்குடியைப் பொருத்தவரையில் சமூகப்பரவல் என்பது இல்லை" என்றார்.
மேலும், தூத்துக்குடியில் டீக்கடை உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாநகரில் உள்ள அனைத்து டீக்கடைகளையும் மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்குச் சாத்தியமில்லை'