தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமம் சந்தீப் நகரில் 30 திருநங்கைகளுக்கு ரூ. 63 லட்சத்தில் பசுமை வீடுகள், ரூ.14.42 லட்சத்தில் குடிநீர் மற்றும் மின் இணைப்பு, ரூ. 22 லட்சத்தில் தார்ச்சாலை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.1.18 லட்சத்தில் 30 பேருக்கு வேலை, ரூ. 54 லட்சத்தில் கால்நடை கொட்டகை மற்றும் அத்தியாவசிய தேவைகள் என ரூ. 1.77 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான பசுமை வீடுகள் மற்றும் கால்நடை கொட்டகை, புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை ஆகியவற்றை திறந்துவைத்தார்.
முன்னதாக, மாணவர்களுக்கு உலர் உணவுடன் முட்டை வழங்கும் பணி கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜு உலர் உணவுடன் முட்டை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் திட்டங்குளம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, குலசேகரபுரத்தில் ரூ. 9.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ. 17.61 லட்சம் செலவில் கட்டப்பட்ட திட்டங்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.