தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கான இன்று அவசியமின்றி சாலைகளில் வாகனங்கள் செல்வதைத் தடுக்கும்வகையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சிட்டி டவர் சந்திப்பில் நடந்த வாகன தணிக்கையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வுசெய்தார்.
அப்போது அவசியமின்றி சாலையில் வாகனம் ஓட்டிவந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். கரோனா தொற்றைத் தடுக்க அரசின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நேற்றிரவு 10 மணியிலிருந்து வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.
தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களின் வாகனங்களைப் பறிமுதல்செய்திருக்கிறோம். அத்தியாவசியம், மருத்துவம் போன்ற பணிகளுக்குச் செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 6 மணியிலிருந்து எல்லா இடங்களிலும் வாகன தடுப்பில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 15 நாள்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 60 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 25 ஆயிரம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன" என்றார்.