தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நாளை (நவ. 12) கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடியில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள், பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க விடாமல், பெற்றோர்கள் அருகில் இருந்து கொண்டுதான் வெடிக்கவைக்க வேண்டும். பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய வாளி மற்றும் மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும்.
திறந்த வெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணிகள் அணிந்திருக்க வேண்டும். பாலிஸ்டர் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. ஏனெனில், அவை எளிதில் தீப்பற்றும் தன்மைகொண்டவை. பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடுவது, பட்டாசைப் பற்றவைத்து கையால் தூக்கிப்போடுவது போன்றவை மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.