தூத்துக்குடி:தருவைக்குளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்.1ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார்(31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர்(22), அதிசய பரலோக திரவியம்(25), மதுரையை சேர்ந்த மாதேஷ் குமார்(15), தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன்(23), ஆதிநாராயணன்(20), மகேஷ்குமார்(24), சிலுவை பட்டி பகுதியை சேர்ந்த அன்பு சூசை மிக்கேல்(48), விக்னேஷ்(31) மற்றும் மணி, சக்தி என மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது, புயலின் காரணமாக கடந்த 20.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இந்தியா-மாலத்தீவு இரு நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதினர்.
இந்த நிலையில், இந்தியா-மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு முன்வந்தது. ஆனால், படகை விடுவிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனை கேட்ட மீனவர்கள் இந்தியா சென்றால் படகுடன் தான் செல்வோம் என்று கூறி வருகின்றனர். மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி ஜெயபாலன் மற்றும் தனியார் ஷிப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோர் ஆகிய இருவரும் மாலத்தீவு நாட்டில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.