தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், கடற்கரை முகப்பு பகுதியில் தகரக்கொட்டகைக்குள் முதல்முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று.
சூரபத்மன் என்ற 'ஆணவம்', சிங்கமுகன் எனும் 'கண்மம்', தாரகாசூரன் என்ற 'மாயை' ஆகிய மும்மலங்களால் ஏற்படும் ஏற்படும் தீமையை ஒழிக்கவே 'ஞானம்' என்ற முருகப் பெருமான் தோன்றி, போரிட்டு வெல்கிறார். இந்த வெற்றிவீர நிகழ்ச்சி கந்தசஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த 15ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவின் 6ஆம் நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவரான ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றன. மாலை 3.30 மணிக்கு சூரபத்மன் தன் படைகளுடன் மேளதாளம் முழங்க கடற்கரைக்கு வந்து போருக்குத் தயாரானார். சரியாக மாலை 4.35 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காகக் கடற்கரையில் எழுந்தருளினார்.
பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த சூரசம்ஹாரம் மாலை 4.49க்கு ஆனைமுகன் சம்ஹாரமும், 4.49க்கு சிங்கமுக வதமும், 5.03க்கு சூரபத்மன் வதமும், 5.12க்கு மாமரத்தில் இருந்து பிரிந்து சூரபத்மன், முருகப் பெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வழக்கமாக மாலை 4.35 மணிக்கு தொடங்கும் சூரசம்ஹாரம் மாலை 6.30 மணி வரை நடைபெறும். ஆனால், இந்தாண்டு சூரசம்ஹாரம் 45 நிமிடங்களில் நிறைவுபெற்றது.
சம்ஹாரத்திற்குப் பிறகு, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அசுரனை வதம் செய்த முருகனைக் குளிர்விக்கும் விதமாக, 108 மகாதேவர் சன்னதி முன்பு 'சாயாபிஷேகம்' நடைபெற்றது. இதையடுத்து நாளை மாலை தெய்வானை அம்பிகைக்கும் முருகப் பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
வழக்கமாக சூரசம்ஹாரத்தைக் காண சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள். ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்படவில்லை. சூரசம்ஹார நிகழ்ச்சி திருக்கோயிலின் முன் பிரகாரத்தில் நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.கவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சூரசம்ஹாரத்தின் பாரம்பரிய வழக்கத்தை மாற்றாமல் கடற்கரையிலேயே நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், இதுதொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணிய ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையின் போது, 'கடற்கரையின் முகப்பு பகுதியில் சூரசம்ஹர நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை' என அறநிலையத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக கடற்கரையின் முகப்பு பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவில் மணல் மேவி சமன் செய்யப்பட்டது. கடற்கரை முகப்பு பகுதியில் திறந்தவெளியாக இல்லாமல் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டு, கொட்டகைக்குள்ளேயே சூரசம்ஹாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்