தூத்துக்குடி: வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப் போனது.
குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதங்களை எதிர்கொண்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்பு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 1,873 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை இன்று திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சி.வ.அரசு உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் இன்னும் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளதால், அந்த பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.