தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் 66ஆவது கூட்டுறவு வார விழா, தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.
இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் 957 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 21 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ''தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த 8 ஆண்டுகளில் பயிர்க்கடனாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 740 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மட்டும் 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அதிமுக தலைமையில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீடித்ததாகச் சரித்திரம் இல்லை.
திமுக தேர்தலைக் கண்டு பயப்படுகிறது. அதன் காரணமாகவே திமுகவினர் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கின்றனர். தமிழ்நாட்டில் சிறந்த கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது. எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அங்குள்ள கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது" என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில், சில எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது - கடம்பூர் ராஜூ இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், கூட்டுறவு துணை பதிவாளர் பிரியதர்ஷினி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சாலையில் பறந்தது தனது பணம் என நினைத்து ரூ. 3 லட்சத்தை தவற விட்ட விவசாயி