தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தினம் - எப்படி இருக்கிறார் கட்டபொம்மனின் வாரிசு?

ஆங்கிலேயரால் கோட்டை கைப்பற்றப்பட்டு முற்றிலும் தகர்க்கப்பட்டது என்று கூறியவரின் கண்களில் பெருமிதம் தெரிந்தது. அவரிடம் பேச்சை ஆரம்பித்தபோது, வீரத்தின் உச்சத்தில் பேசிய கட்டபொம்மனின் எள்ளு பேரன் வீமராஜா கட்டபொம்மன் வரலாறுகளும் உண்மைகளும் மறைக்கப்படக்கூடாது. எனவே, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு டெல்லி செங்கோட்டையில் கம்பீர சிலை நிறுவ வேண்டும் என்றும், சென்னை கோட்டை முன் வெண்கல சிலை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கட்டபொம்மன்
கட்டபொம்மன்

By

Published : Aug 15, 2021, 1:40 PM IST

வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி இன்று 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். விடுதலை வேட்கையின் தாகம் தீர்த்த இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை பேணவும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வீர வணக்கத்தையும் உரிதாக்குதல் ஒவ்வொருவரின் கடமை.

வீர வணக்கத்தை செலுத்தி இன்று மட்டும் அவர்களை நினைக்காமல் ஒவ்வொரு நாளும் அவர்களை நினைக்க வேண்டும்.

அதேபோல், அவர்களின் வழித்தோன்றல்கள் யார்? தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? நிலை என்ன? தேவை என்ன? என்பதை அறிய முற்படுபவர்கள் இல்லை. அதனை அறிய ஈடிவி பாரத் முற்பட்டது.

தென்னகத்தின் வீர தாகம்

விடுதலை வேட்கை தேசமெங்கும் பரவிக் கிடந்த நேரம் தென்னிந்தியாவில் ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து அவர்களின் அடக்குமுறைக்கெதிராக போராடி வெள்ளையனை நடுங்க வைத்த வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். அன்றைய காலம் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு துணைபோனவர்களுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்.

சரி யார் இந்த கட்டபொம்மன்... ஆங்கிலேயருக்கு வரி தர மறுத்தவர், வரி கேட்ட ஜாக்சன் துரையிடம் வீர முழக்கமிட்டவர், கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட முதல் தென்னிந்திய குறுநில ஆட்சியாளர் என அவரது வரலாறுகளை புத்தகங்களில் படித்தும் சினிமாவில் பார்த்தும் இருக்கிறோம்.

ஆனால், அவரை தூக்குமேடை வரை கொண்டு சென்றது எப்படி? ஏன் வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை தேட தயாரானோம்.

விடை தேடுவதைவிடவும் முக்கியம் அந்த விடை உறுதிப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக, கட்டபொம்மனின் நேரடி வாரிசையே பாஞ்சாலங்குறிச்சியில் சந்தித்தோம்.

கட்டபொம்மனின் வாரிசு

84 வயதில் சற்றும் குறையாத கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார் கட்டபொம்மனின் எள்ளுப்பேரன் வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்ம துரை.”கோட்டை அழியும்போது கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மா கர்ப்பிணியாக இருந்தார்.

அவரை தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் ஒள்ளிக்கவுண்டர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இந்த தகவல் ஆங்கிலேயருக்கு கிடைத்ததும் அவரை பல்லக்கில் சிறையெடுத்து திருச்சி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கவைத்தனர். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

அந்த வழித்தோன்றலில் வந்த 5ஆம் தலைமுறை வாரிசுதான் நான். பாஞ்சாலங்குறிச்சி பாளைய கோட்டை ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டபோது கட்டபொம்மனின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை போன்றோர் வெள்ளையர்களை வீறுக்கொண்டு திரும்ப தாக்க வேண்டும் எனக் கூறினர்.

ஆனால், ஊமத்துரை கோட்டையை விட்டு வெளியே சென்றால் ஆபத்து. எனவே கோட்டையை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தடுத்தார். இருப்பினும் மற்ற பாளையக்காரர்கள் கருத்தை கேட்பதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு சென்றார்.

கட்டபொம்மன் கைது

அங்கு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனை வெகுவாக கவனித்து எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்தனர்.‌ இதனால் ஏற்பட்ட அசதியில் அயர்ந்து தூங்கினார் கட்டபொம்மன்.

அந்த நேரத்தில்தான் கட்டபொம்மன் காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயலார் சிறை பிடிக்கப்பட்டார்.கட்டபொம்மனை சிறைப்பிடிக்க பெரும் திட்டமே தீட்டப்பட்டது. கட்டபொம்மன் எங்கெங்கு செல்கிறார் என்பதை எட்டயபுரம் பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு தகவல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இதற்கு சன்மானமாக கட்டபொம்மனின் மறைவுக்கு பின் எங்கள் ஜமீன் சொத்தை எல்லாம் அபகரித்து அதை எட்டயபுரம் பாளையக்காரருக்கு ஆங்கிலேயர்கள் கொடுத்தனர்.

கயத்தாறில் தூக்கு ஏன்?

கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. ஏனெனில், அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 72 பாளையங்கள் இருந்தன. ஒரு பாளையத்திலிருந்து மற்றொரு பாளையத்துக்கு செல்ல சரியான பாதை கிடையாது.

ஏகமாக கள்ளிக்காடு நிரம்பியிருந்த காலம் அது. காசி முதல் கன்னியாகுமரிவரை ஒரே நேர் சாலை மட்டுமே உண்டு. அதனால், கட்டபொம்மனை மற்ற பாளையக்காரர்கள் முன்பு தூக்கிலிட்டு அதன் மூலமாக அச்சத்தை ஏற்படுத்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடிவு செய்தனர்.

இதற்காக, கட்டபொம்மனை புதுக்கோட்டையிலிருந்து கயத்தாறுக்கு அழைத்து வந்து 16 நாள்கள் சிறை வைத்தனர். இதற்குள் மற்ற பாளையக்காரர்களுக்கும் தகவல் கொடுத்து அனைவரையும் கயத்தாறுக்கு வரவழைத்தனர்.

தொடர்ந்து 1799 அக்டோபர் 16ஆம் தேதி கட்டபொம்மன் தூக்கு மேடை ஏற்றப்பட்டார்.அப்போது, ஆங்கிலேய தளபதி பேனர் மேன், கட்டபொம்மனை பார்த்து, "ஒரு தம்படி கணமாவது என்னிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேள், உன்னை உயிருடன் விட்டுவிடுகிறேன்" என சொன்னான்.

ஆனால் "6,000 மைலுக்கு அப்பால் இருந்து வந்த உனக்கு பயந்து வாழ்வதைவிட, நான் தூக்கு கயிறையே முத்தமிடுகிறேன்." என கட்டபொம்மன் கர்ஜித்து தூக்கு கயிறை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டார்.

மற்ற பாளையக்காரர்கள் அனைவரும் கவலையில் இருந்தனர். ஆனால், அங்கு நின்ற எட்டப்பனும், புதுக்கோட்டை தொண்டைமான் போன்றோரும் ஏளன சிரிப்பு சிரித்தனர்.

அவர்களை பார்த்து காறி உமிழ்ந்து கட்டபொம்மன் தூக்கில் தொங்கி தன்னுயிரை நீத்தார். அவர் இறந்த பிறகும்கூட அவரது உடலை தொட எட்டப்பன், புதுக்கோட்டை தொண்டைமான் எல்லாம் பயந்தனர்.

அதன்பின்னும் ஊமைத்துரை 3 ஆண்டு காலம் பாஞ்சாலங்குறிச்சியில் ஆட்சி செய்தார். இருப்பினும் அதைத்தொடர்ந்து, ஆங்கிலேயரால் கோட்டை கைப்பற்றப்பட்டு முற்றிலும் தகர்க்கப்பட்டது என்று கூறியவரின் கண்களில் பெருமிதத்தோடு வறுமையின் நிழலும் தெரிந்தது.

அதுகுறித்து அவரிடம் பேச்சை ஆரம்பித்தபோது, அதுவரை வீரத்தின் உச்சத்தில் பேசிய வீமராஜா விரக்தியின் உச்சத்தில் பேச தொடங்கினார்.

பென்சன் வந்ததும், நின்றதும்

வறுமை கோட்டுக்கு கீழ்தான் வாழ்கிறேன். "கூழ் குடிச்சாலும் கம்பீரம் குறையக்கூடாது" என்பதால் இப்போதும் நான் வெளியே போகும்போது மட்டும் ஜமீன் சட்டை போட்டுப்பேன். மற்ற நேரங்களில் ஒரு அழுக்கு வேட்டி மட்டும்தான் கட்டியிருப்பேன்.

கோட்டை அழிந்த பின்னால் அங்கிருந்து கிடைச்ச செம்பு நாணயம், அணிகலன் மற்ற பொருள்களில் பாதியை அரசாங்கத்திடம் கொடுத்தேன், பாதியை கடலிலும் போட்டேன். முதல்முதலாக ஆங்கில அரசு எங்களுக்கு ரூ.52.50 பென்சன் கொடுத்தது. ஆனால் அதுவும் சுதந்திரத்திற்கு பின் நின்றது.

பென்சனுக்காக பல தலைவர்களை சந்தித்தேன். வழி செலவுக்கு மட்டும் கையில் காசு வைத்துக்கொண்டு, நடந்தே போய் தலைவர்களை பார்த்து பேசினேன்.

அப்படி நான் முதல்முதலில் காமராஜரை சந்தித்தேன். பிறகு சஞ்சீவி ரெட்டி, ஓமந்தூரார் ராமசாமி, ஜி.கே.மூப்பனார், கலைஞர் கருணாநிதி இப்படி எல்லாரையும் பார்த்தேன்.

கருணாநிதி கொடுத்த பென்சன்

அப்போதுதான், கலைஞர் கருணாநிதியை பார்த்து 'ஆங்கில சர்கார் கொடுத்த பென்சனைக்கூட சுதந்திர சர்கார் நிறுத்திட்டு, இது நியாயமானு' கேட்டு துண்டுசீட்டுல எழுதி கொடுத்தேன். அதை பார்த்துவிட்டு, ‘கட்டபொம்மனின் வாரிசுதான் என தெரிந்தால் கட்டாயம் அரசால் செய்ய வேண்டியதை செய்கிறேன்’ என பதில் சொன்னார்.

அவரை சந்தித்துவிட்டு வந்த 6 மாதங்களில் கே.வி.கே.சாமி நினைவு மண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ள பேரூரணிக்கு கலைஞர் கருணாநிதி வந்திருந்தார்.

அப்போது, அந்த ஊர் தலைவரும் எங்கள் குடும்ப உறவினருமான ஒருவர் என்னை கருணாநிதியிடம் அறிமுகம் செய்துவைத்தார். அதனையடுத்து உடனடியாக பென்சன் வழங்க உத்தரவிட்டார்.

கருணாநிதி கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடு

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருக்கும்போது இடிந்து கிடந்த கோட்டை இடத்தை சுற்றுலா தலமாக அறிவித்து பொதுமக்கள் பார்க்க உத்தரவிட்டார். அதற்கடுத்து கருணாநிதிதான் இடிந்த கோட்டை மாதிரியே இன்னொரு கோட்டை கட்டி, ஆராய்ச்சிக்கும் உத்தரவிட்டார்.

என்னோட சொந்தத்துக்காக அவரிடம் நான் போய் உதவி கேட்கும்போது, "வெறும் 4 வீடு கட்டுனா அது ஊராகாது, எனவே உங்களின் சொந்தபந்தங்களின் பட்டியல் கொடுங்கள் எல்லாருக்கும் சேர்த்து வீடு கட்டி தருகிறோம்" என்றார்.


அதன்படி, எங்கள் சமுதாய சொந்தங்கள், பெண்ணெடுத்து, பெண் கொடுத்தோர் என பட்டியல் கொடுத்துதான் இன்று 200 பேருக்கு பாஞ்சாலங்குறிச்சியில் தொகுப்பு வீடு அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

கோட்டையிலும், டெல்லியிலும் சிலை

கட்டபொம்மன் வரலாறுகளும் உண்மைகளும் மறைக்கப்படக்கூடாது. எனவே, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு டெல்லி செங்கோட்டையில் கம்பீர சிலை நிறுவ வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை கோட்டை முன் வெண்கல சிலை வைக்க வேண்டும். ரூபாய் நாணயத்தில் கட்டபொம்மனின் உருவம் பொறித்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் கட்டபொம்மனின் சிலையை புதுப்பிக்க வேண்டும்.

ஓட்டப்பிடாரத்தில் பழுதுப்பட்டதாக இடிக்கப்பட்ட கட்டபொம்மன் நுழைவு தோரணவாயிலை மீண்டும் கட்ட வேண்டும். சுதந்திரத்துக்காக கட்டபொம்மனோடு போராடிய ஊமைத்துரை, மருது சகோதரர்கள், பெட்டிப்பகடை, வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்டோருக்கும் உரிய சிலை வைக்கவேண்டும்.

பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கோட்டை புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும். கோட்டையை சுற்றியுள்ள 42 ஆங்கிலேயர்களின் கல்லறைகளும் சீரமைத்து பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசி முடிக்கையில், சுதந்திரத்திற்காக உயிரை விட்டவர்களையும், அவர்களின் வாரிசுகளையும் தற்போது சுதந்திரமாய் இருக்கும் அரசுகளும், மக்களும் மறந்துவிடக்கூடாது என்று மட்டும் புரிந்தது.

ABOUT THE AUTHOR

...view details