ஜப்பான் நாட்டை தாயகமாக கொண்ட ஜே.வி.சி. நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்திடம் இரிடியம் தனிமத்தை வணிக ரீதியாக பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜே.வி.சி. நிறுவனம் இந்தியாவில் மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. அமைப்பிடம் இரிடியம் ஆர்டர் செய்திருந்தது.
இதனைத்தொடர்ந்து மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் பெட்டிகளை அனுப்பும்பொழுது அதிலிருந்து 10 பெட்டிகள் மாயமானது. இதுகுறித்து மும்பை நகர காவல் நிலையத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். களவுபோன இரிடியம் பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா ஆறு இரிடியம் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் களவுபோன 10 இரிடியம் பெட்டிகளில் மூன்று பெட்டிகள் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு கிடைத்துள்ளது. கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு விலை அதிகம் என்பதால் அதை விற்கும் பொருட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த தனது நண்பரான வைத்திலிங்கம் என்பவரிடம் ஒரு இரிடியம் பெட்டியை சுவாமிநாதன் கொடுத்துள்ளார்.
இதனை எடுத்துக்கொண்டு சுவாமிநாதன் அவருடைய நண்பரான முத்துராமலிங்கத்துடன் TN59 BB 0909 என்ற பதிவெண் கொண்ட காரில் தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளார். தொடர்ந்து அவர்கள், தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதியம்புத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட சிவஜோதி தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். இதனை அறிந்த தூத்துக்குடியை சேர்ந்த தங்கம், மரியதாஸ், முருகன் ஆகியோர் கள்ளச்சந்தையில் இரிடியத்தை வாங்குவதற்காக அங்கு சென்றனர்.