தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல கோடிக்கணக்கில் ஊழல்..? - ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல் - திருச்செந்தூர் முருகன் அஸ்தம்

Tiruchendur Murugan Temple: தமிழகத்தின் வேறு எந்த கோயில்களிலும் நடக்காத அளவில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக ஆர்டிஐ (RTI) மூலம் வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, இக்கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 8:13 PM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல கோடிக்கணக்கில் ஊழல்..? - ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மதுரை: தமிழகத்தின் வேறு எந்த கோயில்களிலும் நடைபெறாத அளவில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இக்கூட்டுக் கொள்ளையின் உண்மை நிலவரத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழ்க்கடவுள் எனப் போற்றப்படுகின்ற முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகப் பக்தர்களால் போற்றி வணங்கப்படுவது, 'திருச்செந்தூர் முருகன் கோயில்' ஆகும். இங்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திலிருந்து மட்டுமன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர்.

ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும், சூரனை முருகன் வதம் செய்யும் 'சூரசம்ஹாரம்' பக்தர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஆன்மீக நிகழ்வாகும். அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிகின்றனர். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட இங்குச் சிறப்பு யாகங்களைப் பக்தர்கள் நடத்துகின்றனர். இதனால், அவற்றிலிருந்து விடுபட முடியும் என்பது அவர்களது ஆண்டாண்டு கால நம்பிக்கை.

இந்நிலையில் இக்கோயிலில் நடைபெற்ற ஆண்டு தணிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதுடன், அந்த அறிக்கையின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவரால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு ஆர்டிஐ ஆர்வலர் டில்லி பாபு இன்று (டிச.16) அளித்த பேட்டியில், 'திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோயிலில் நடைபெற்ற தணிக்கை குறித்த அறிக்கையைக் கடந்த ஓராண்டாகப் போராடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகப் பெற்றோம். இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, சுவாமிக்கு அணிவிக்கக்கூடிய அஸ்தத்தில் இருந்த 283 வைரக் கற்களில் தற்போது 133 போலிக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 337 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அவற்றின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் ஓராண்டிற்குச் சராசரியாக ரூ.6-லிருந்து ரூ.7 கோடி வரை ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற முறைகேடுகளுக்கு இதுவரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

'கோயில் தணிக்கை பணி' மேற்கொள்வதற்கான கட்டணம் என்று 'ரூ.9 கோடி' எடுக்கப்பட்டுள்ளது. 'ஆணையர் பொதுநிதி' என்ற பெயரில் பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'இஸ்லாம்' மார்க்கத்தைச் சேர்ந்த ஜமாத் அமைப்பினர், திருச்செந்தூர் கோயிலின் ரூ.20 கோடி சொத்துக்களை மீட்க வேண்டும் என வழக்குத் தொடுத்திருக்கின்றனர். அவ்வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை உரிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 31, 33-ன் படி ஆண்டிற்கு ஒருமுறையும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கோயிலில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருச்செந்தூர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கோயில் சொத்துக்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஏற்படுத்திய அக்குறிப்பிட நபர்கள் மீது எந்தவித குற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை' என்றும் குற்றம்சாட்டினார்.

தணிக்கை செய்வோரிடம் இக்குற்றச் செயல்களைக் கொண்டு சென்றால், அவர்களும் கண்டுகொள்வதில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம்..?' என்கிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ஆர்டிஐ ஆர்வலர் தினேஷ் கூறுகையில், 'திருச்செந்தூர் கோயில் தணிக்கை அறிக்கை குறித்துக் கேட்டபோது, தர மறுத்துவிட்டார்கள். இதற்காக மேல்முறையீடு செய்தும் கிடைக்கவில்லை. பிறகு தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்தே, இந்தத் தகவல்களைப் பெற்றோம். சுவாமிக்கு அணிவிக்கக்கூடிய திருவாபரணங்களில் உள்ள வைரக்கற்களை எடுத்துவிட்டு போலியான கற்களைப் பதித்து பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கையாடல்கள் குறித்த குற்றச்சாட்டுகளில் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. சுவாமிக்கு நடைபெறக்கூடிய பூஜை இனங்களுக்கானப் பொருட்களில் கிட்டத்தட்ட நான்கு கிலோவுக்கும் மேல் வெள்ளி இனங்கள் திருடப்பட்டுள்ளன.

அவ்வாறு திருடப்பட்ட பொருட்களை மீட்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காவல்துறையிலும் இதுகுறித்த புகார்கள் இல்லை. அம்மனின் வைரக்கற்கள் நிறையத் திருடப்பட்டிருக்கின்றன. திருச்செந்தூர் கோயிலில் தொடர்ந்து அதிக மோசடியும், முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. சுவாமியின் வாகனங்களில் உள்ள வெள்ளித் தகடுகள் கூட திருடப்பட்டுள்ளன. அவையே ஆறு, ஏழு கிலோவுக்கு மேல் உள்ளன. இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் பக்தர்களின் கண்காணிப்பு அதிகமாக வேண்டும்' என்கிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகப் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை, சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் வெளியாகியுள்ள சில தகவல்களே திருச்செந்தூர் கோயிலின் இன்னொரு பக்கத்தைக் காட்டியுள்ளது. திருவாபரணங்களைப் பராமரித்து வந்த ஸ்தலத்தார்களான டி.எஸ்.எஸ்.கிருஷ்ணய்யர், முத்துச்சாமி, செந்தில் மணி அய்யர், சுப்பைய்யர்ஆகியோர் திருக்கோயில் கருவூலத்திலிருந்து பல கோடி மதிப்பிலான 46 நகைகளைத் திருடியுள்ளதாகவும்; அதில் குறிப்பாக விலை உயர்ந்த வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், புஷ்பராகம் கற்களைத் திருடி மாற்றாக போலிக்கற்களைப் பதித்தும், நகைகளில் தங்கத்தின் அளவைக் குறைத்தும் மோசடி செய்துள்ளனர். இதில் சில நகைகளையும் மீட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகளை மேற்கொண்டோர் மீது, அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இபிகோ (IPC) பிரிவு 408, 409 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இபிகோ பிரிவுகள் 380, 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்து அறநிலையத்துறை மிக மென்மையான போக்கில் செயல்பட்டுள்ளதாகவும் இதற்கு முறையான விசாரணை தேவை என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் உரியச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஆர்டிஐ ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லி பாபு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக, ஆர்டிஐ-யில் வெளியான தகவலில் சில விபரங்கள் பின்வருமாறு:-

'வெள்ளி இனங்களில் ரூ.72,990 மதிப்புள்ள வெள்ளி, போக்கு போயுள்ளது. இந்த இழப்பீட்டிற்குச் சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து இழப்பீடு தொகையை வசூல் செய்த விபரம் - தணிக்கைக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தணிக்கைக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வ.எண்ஆவணங்கள் படி வ.எண்இனம்போக்கு போயுள்ள அளவுமதிப்பு
1. 54/82 கைலாசபர்வத வாகனம் 545 கிராம் ரூ.16,350
2. 158/82 கமல வாகனம் 1150 கிராம் ரூ.34,500
3. 159/82 குதிரை வாகனம் 300 கிராம் ரூ.9,000

* இந்த இனம் 2010 மதிப்பீட்டு அறிக்கையின் இழப்பீடு சம்பந்தமான மதிப்பீடுகள் விளக்கப்பட்டியலில் இடம்பெறவில்லை.

வ.எண் ஆவணங்கள் படி வ.எண் இனம் போக்கு போயுள்ள அளவு மதிப்பு
4. 160/82 குதிரை வாகனம் 210 கிராம் ரூ.6,300
5. 161/82 வெள்ளி சப்பரம் 300 கிராம் ரூ.9,000
6. 162/82 வெள்ளி சப்பரம்-4 தூண்கள் 100 கிராம் ரூ.3,000
7. 166/82 அன்ன வாகனம் 200 கிராம் ரூ.6,000
8. 167 மயில் வாகனம் 108 கிராம் ரூ.3,240
9. 169/82 யானை விலாஞ்சி புல் வாகனம் 200 கிராம் ரூ.6,000

தந்த பல்லக்கு:2010 மதிப்பீடு அறிக்கையின்படி மரத்தின் மேல் உள்ள தந்த சட்டங்களில் 80% போக்கு போயுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.1,00,000/- இந்த இழப்புக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் தொகையினை வசூல் செய்த விபரம் தணிக்கைக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தணிக்கைக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இம்மதிப்பீடு அறிக்கை கிடைக்கப் பெற்ற ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இம்மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது மிகவும் வருந்தக்கதாகும்.

இம்மதிப்பீட்டு அறிக்கையில் குறைபாடுகள் மீது இது காறும் சுட்டிக்காட்டப்படும் இழப்பீடு தொடர்பான இல்லையென்றால் அவ்விழப்பீட்டை உரிய நடவடிக்கை எடுக்காத பிரிவு எழுத்தருக்கு பணியாளர்கள் தற்சமயம் பணியில் பொறுப்பாக்குவதுடன் இனியும் காலதாமதம் செய்யாமல் இவ்வறிக்கையின் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை தணிக்கைக்குத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாத்தான்குளம் அருகே நடுக்காட்டில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details