தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 2017-18 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும், அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி அரசு தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன. 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.