வெளிமான் சரணாலயத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை தூத்துக்குடி:திருநெல்வேலி-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் உள்ள வல்லநாட்டில் வெளிமான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. சுமார் 16.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த சரணாலயம், பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாகும். இந்த வன அழகுடன் கூடிய காட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த சரணாலயத்தில் காடுகளின் சுகத்தையும், இன்பத்தையும் அனுபவிக்க முடியும். வல்லநாடு வனவிலங்கு சரணாலயம் இந்த இலக்கை பெரிய அளவில் நிறைவேற்றுகிறது. இது பல அற்புதமான விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பான சரணாலயம் மட்டுமல்ல, இப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கியமான ஒரு உயிரியல் பன்முகத்தன்மை வாய்ந்த இடமாகும். குரங்குகள், காட்டுப் பூனைகள், விரியன் பாம்புகள், கரும்புலி முயல்கள் மற்றும் பலவற்றையும் இந்த மிருகங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.
கொம்பு ஆந்தைகள், சிட்டுக்குருவிகள், பருந்து கழுகுகள், காட்டில் காக்கைகள், மயில்கள் போன்ற பல வகையான பறவைகளுக்கு இப்பகுதி பாதுகாப்பான புகலிடமாகவும் உள்ளது. முள்ளம்பன்றி, எறும்பு தின்னி, உடும்பு, மலைப்பாம்பு, கீரிப்பிள்ளை, குள்ளநரி, காட்டு முயல், மரநாய் மேலும் 86 வகையான பறவையினங்கள் வாழ்கின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மலை பகுதிக்கு தான் தற்போது ஆபத்து நிகழ்ந்துள்ளது. ஆம், இந்த மலை அடிவாரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினந்தோறும் 100க்கணக்கான லாரிகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்த வல்லநாடு மலைப்பகுதி அடிவாரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இதே போல் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்து வந்துள்ளனர். அப்போது சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன் எதிரொலியாக, அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார், முழுமையாக ஆய்வு செய்து ஆழ்துளை கிணறுகளுக்கு உடனடியாக சீல் வைத்து தண்ணீர் எடுக்க தடையும் விதித்தார்.
ஆனால் தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தற்போது அந்த இடத்தில் தண்ணீர் உறிஞ்சி தினம் தோறும் 100க்கு மேற்பட்ட லாரிகளில் தூத்துக்குடியில் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டங்கள் உள்பட தென்மாவட்டங்களில் பருவமழை பொய்காத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் சீலை அகற்றி மீண்டும் அந்த இடத்தில் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விலங்குகளுக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கையில், “தூத்துக்குடி வல்லநாடு மலைப்பகுதியில் வெளிமான் சரணாலயம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி அரசு அனுமதி இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சி நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் விற்பனை செய்வதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் ரவிகுமாரிடம் புகார் அளித்தேன். பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்றது. புகாரின் அடிப்படையில் 18.02.2015ஆம் ஆண்டு ஊராட்சி செயல் அலுவலரிடம் உரிய அனுமதி பெறாமல் வணிக நோக்கத்திற்காக குடிநீர் விற்பனை செய்யும் பொருட்டு அமைக்கப்பட்ட 4 ஆழ்துளை கிணறுகள் திருவைகுண்டம் வட்டாச்சியர் முன்னிலையில் 02-11-2016 அன்று மின் இணைப்பு துண்டிப்பு செய்து சீல் வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது அரசு வைத்த சீலை உடைத்து குடிநீர் உறிஞ்சி நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் வணிக நோக்கில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வல்லநாடு வன சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீர் இல்லாமல் மரங்கள் பட்டு போகும். நிலத்தடி நீர் மட்டம் குறையும். மலை அடிவாரத்தில் இயற்கை நீர் தேக்கங்கள் மற்றும் தொட்டிகளில் உள்ள நீர் குறைவதனால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும். ஆகவே, உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு நோக்கத்திற்கு பெறப்பட்ட மின்சாரத்தை ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படுவதால் மின்சார இணைப்பை துண்டித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் திருடி செல்லும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வைத்த சீலை உடைத்து அனுமதி இல்லாமல் தண்ணீர் திருடுவது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வைத்த சீலை உடைத்த குற்றத்திற்காகவும் மீண்டும் தண்ணீரை திருடி விற்பனை செய்யும் குற்றத்திற்காகவும் வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்ஜிடம் மனு அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்” என தெரிவித்தார்.
இந்தியாவின் பல இடங்களில் வெளிமான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், வல்லநாடு சரணாலயத்தில் இவற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்படுவது விலங்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு விலங்குகளை காப்பாற்ற முன் வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பிரதான கோரிக்கையாகும்.
இதையும் படிங்க:தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? அதற்கான காரணம், தீர்வு என்ன? - பேராசிரியர் பூர்ணசந்திரிகா கூறும் ஆலோசனைகள்!