தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக செயற்பாட்டாளர் வேல்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மார்ச் 19) தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, குரூஸ் பர்னாந்து சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், "வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்கள் நடுவது குறைந்திருக்கிறது. ஒரு வாகனத்தில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுவாயு சுத்தப்படுத்த ஆறு மரங்கள் தேவைப்படும் நிலை உள்ளது.
ஆனால், இன்றைய சூழலில் மரம், காடு என அனைத்தையும் அழித்து வாழ்விடங்கள் உருவாக்கப்படுகின்றன. மண்ணை நஞ்சாக்கும் இந்தச் செயலை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் ஏஜெண்டாகவும், பிரதமர் மோடி அகில உலக ஏஜெண்டாகவும் செயல்படுகின்றனர்.
கடலில் சிங்கள மீனவர்களின் அட்டூழியத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தமிழ்நாடு மீனவர்களை பாதுகாப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்ட நெய்தல் படை உருவாக்கப்படும். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகளில் பயிற்சி பெற்ற இரண்டு நெய்தல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.