தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 2,097 வாக்குப்பதிவு மையங்களில் நேற்று அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தன. இந்த ஆறு சட்டப்பேரவை தொகுதிகளின் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் தூத்துக்குடி வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.
இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அக்கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரமும் வாக்கு பதிவு இயந்திரத்துடன் வைக்கப்பட்டன. இவை அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.