தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்றுக்கொண்டு ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்குச் சென்று வருகின்றனர்
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் மக்களுக்கு இணையதளம் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைப் பகுதியில் 15 இடங்களில் சோதனைச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் சரியான காரணங்களுக்காகத்தான் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் ராஜிவ் நகர் இ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ்(49). இவர் கயத்தாறில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் மருத்துவ காரணங்களுக்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி வருவதற்கு இ-பாஸ் பெற்று வந்துள்ளார். ஆனால், சோதனைச் சாவடியில் அமல்ராஜ் தவறான ஆவணங்களை கொண்டு இ-பாஸ் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதே போல், பொய்யான தகவல்களை வழங்கி, இ-பாஸ் பெற்றுக் கொண்டு பல்வேறு மாவட்டங்களைச் சுற்றி வந்துள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஊரடங்கு காலகட்டத்தில் நோய்த்தொற்றினை பரப்பும் விதமாக நடந்துகொண்டதன் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அமல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தற்போது, அவர் தனிமைப்படுத்தப்படும் மையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ-பாஸ் பெற்று தூத்துக்குடி மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்துக்குச் சென்று வருபவர்கள் மீது தொற்றுநோய் பரவல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.