தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே முறுக்கு கடைக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவ விசாரணையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள இருவரை தேடும் பணியில், போலீசார் தீவிரமாகத் ஈடுபட்டு உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செந்தில்நாதன் (வயது 43). இவர் ஸ்ரீவைகுண்டம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது முறுக்கு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரது கடைக்குள் புகுந்து செந்தில்நாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை; கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்!
இதில் படுகாயம் அடைந்த செந்தில்நாதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனை அடுத்து பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன் பின்னர் செந்தில்நாதன் உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். செந்தில்நாதனை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம கும்பலை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான இளம் சிறார்கள் இருவரை கைது செய்தனர்.
இதையும் படிங்கAndhra Violence: டி.டி.பி, ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் மோதல்.. ஆந்திரா செல்லமுடியாமல் தமிழக பயணிகள் தவிப்பு!
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, “கொலை செய்யப்பட்ட செந்தில்நாதன் மகன் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கிறார். இந்த நிலையில், அவருடன் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 10ம் வகுப்பு படிக்கும் போது டியூசன் வகுப்பில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. அந்த முன் விரோதம் காரணமாக மாணவர்கள் நேற்று முன் தினம் கடைக்குள் புகுந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
மேலும், தலைமறைவாகி உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் முறுக்கு வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை; கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்!