ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட்ட பள்ளி மாணவ-மாணவிகள் தூத்துக்குடி: உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று 2020ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.இதையடுத்து மத்திய தொல்லியல் துறையினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 2021ஆம் ஆண்டு முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், வெண்கலப்பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பில் அகழாய்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை இருக்கும் இடத்திலேயே காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கபட்டுள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்த சைட் மியூசியம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஏராளமானோர் வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் இதை பார்வையிட வருகை தருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலி ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் மியூசியத்தினை பார்வையிட வருகை தந்தனர். அவர்கள் சைட்மியூசியம் மற்றும் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். மாணவ மாணவிகளுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர் ராஜேஸ் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அகழாய்விற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் அதன் மீது கண்ணாடி பேழைகள் அமைத்து அதன் வழியாக தொல்பொருள்களை பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளே விளக்குகள் பொருத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு முதுமக்கள் தாழிகள், அதனுள் கிடைத்த பொருள்கள் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பா, சீனா, மேற்கு ஆசியா கண்டத்திற்கு நிகரான இந்த சைட் மியூசியம் ஆதிச்சநல்லூர் அமைந்து இருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1876ல் இந்தியாவில் முதல் முதலில் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூரில் சுமார் 147 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிலே முதல் முதலில் சைட் மியூசியம் அமைவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.
இதையும் படிங்க:திருமண விருந்தில் தீ விபத்து! 100 பேர் பலி! ஈராக்கை உலுக்கிய கோர சம்பவம்!