தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கருணாகரன் - பூரணச்செல்வி தம்பதி. கருணாகரன் கூலித்தொழிலாளியாவார், அவரது மனைவி மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஐஸ்வர்யா அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறவினர் ஒருவர் இறந்ததால், ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்லாமல், இரண்டு நாள் விடுமுறை எடுத்துள்ளார்.
விடுமுறை கழித்து பள்ளிக்குசென்ற ஐஸ்வர்யாவை, கணினி அறிவியல் பாட ஆசிரியர் ஞானப்பிரகாசம் கடும் வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அதனோடு, ஐஸ்வர்யாவை பள்ளி மைதானத்தில் ஓடச்சொல்லியும், தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது நடந்த பருவத்தேர்விலும் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா, நேற்று காலை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பிற்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து வீட்டில் அவருடைய பெற்றோர்கள் கேட்டதற்கு பள்ளிக்கு செல்ல தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.