தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: காவல் ஆய்வாளர் உள்பட 20 பேரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை! - state human rights commission inquiry

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்குத் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 20 பேரிடம் மனித உரிமைகள் ஆணைய துணைக் கண்காணிப்பாளர் குமார் விசாரணை மேற்கொண்டார்.

குமார்
குமார்

By

Published : Jul 15, 2020, 9:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், இவ்வழக்கு சிபிஐக்கு மாறும் வரை, தற்காலிகமாக சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மனித உரிமைகள் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதைப் போல பல்வேறு அமைப்பினரும் மனித உரிமை ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில் சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணைய துணைக் கண்காணிப்பாளரும் விசாரணை அலுவலருமான குமார் தூத்துக்குடியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று (ஜூலை 14) வந்தார்.

விசாரணை:

ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், கடைக்காரர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமைக் காவலர், வழக்கில் முக்கிய சாட்சியான ரேவதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மனித உரிமைகள் ஆணைய விசாரணை அலுவலர் குமார் நேற்று (ஜூலை 14) விசாரணை நடத்தி சாட்சியங்கள் பெற்றார். இந்நிலையில் இரண்டாம் நாள் விசாரணை இன்று (ஜூலை 15) தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.

இந்த விசாரணையில் சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா, சாத்தான்குளம் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் பாலசுப்ரமணியன், வெங்கடேஷ், சாத்தான்குளம் தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனித உரிமைகள் ஆணைய துணைக் கண்காணிப்பாளரும் விசாரணை அலுவலருமான குமார் பேசிய காணொலி

இது குறித்து மனித உரிமைகள் ஆணைய விசாரணை அலுவலர் குமார், 'இந்தக் கொலை தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்பட 20 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவு அறிக்கைகள் மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலர் சுனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். இந்த வழக்குத் தொடர்பாக மதுரை சிறையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்' என்றார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details