தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கில் கோவில்பட்டி முதலாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்.
இதனிடையே வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல் துறையினர், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமதுரை, செல்லதுரை, வெயிலு முத்து, தாமஸ் பிரான்சிஸ், பால் துரை உள்ளிட்டோரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சிபிஐ அலுவலர்கள் கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியில் முகாமிட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். அவர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், ஜெயராஜ் மற்றும் பென்னக்ஸின் உறவினர்கள், நண்பர்கள், சாட்சிகள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெற்றுள்ளனர்.
மேலும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், முத்துராஜ் உள்ளிட்டோரையும் காவலில் எடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தி சாட்சியங்கள் பெற்றனர். இவை அனைத்தும் சிபிஐ அலுவலர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுபடி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஊடற்கூறாய்வு செய்யப்பட்டது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாவு காணெளி வெளியீடு! ஊடற்கூறாய்வில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்திருப்பது தொடர்பான காணொலி தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெறுவதும், அப்பொழுது ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வாங்கி தரவேண்டுமென உறவினர் ஒருவர் கதறி அழுவதும் பதிவாகி உள்ளது. மேலும் ஜெயராஜின் முகத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட காயங்கள் இருப்பதும், பென்னிக்ஸின் பின்புறத்தில் தோல் உரிக்கப்பட்டு இருப்பதுமான காட்சிகள் பதிவாகி உள்ளன. இவை சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாத்தான்குளம் வழக்கு விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க...சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ இரண்டாவது நாள் விசாரணை