தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்திவந்தவர் ஜெயராஜ் (56). அவருடைய மகன் ஃபென்னிக்ஸ் (31) இருவரும் ஜூன் 19ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்திருந்தாகக் கூறி சாத்தான்குளம் காவல் துறையினர் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் 22ஆம் தேதி உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், அவர்களின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும், இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 80 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கப்பேரவைத் தலைவர் வினாயகமூர்த்தி இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கப்பேரவைத் தலைவர் வினாயகமூர்த்தி, "சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு அரசு ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழப்பு: உடற்கூறாய்வை வீடியோ பதிவுசெய்ய உத்தரவு!