தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும், ஊரடங்கை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக்கூறி, கடந்த 19ஆம் தேதி இரவில் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட அங்கு பணியாற்றிய காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வியாபாரிகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்பட்ட உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.