தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். சாத்தான்குளம் காவல் துறையினர்தான் அவர்களை அடித்து கொலை செய்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரித்து வருகிறார். கோவில்பட்டி கிளை-சிறை, சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜின் உறவினர்கள், சாட்சிகள் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்டோரிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், சம்பவம் நடைபெற்ற போது பணியில் இருந்த காவலர்கள், அலுவலர்களிடம் அவர் வாக்குமூலங்களைச் சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், சாத்தான்குளத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும் ரேவதி என்பவரிடம் பெற்ற வாக்குமூலத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய காவலர்கள் அடித்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், அவர்களை அடித்து துன்புறுத்தியதில் ரத்தக்கறை டேபிள் மற்றும் சேர்களில் படிந்து இருந்ததையும், லத்திகளில் உறைந்து இருப்பதையும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாஜித்திரேட் பாரதிதாசன், பென்னிக்சை அடிக்கப் பயன்படுத்திய லத்தியைக் கைப்பற்றி பத்திரப்படுத்தினார். மேலும் டேபிள், சேர் உள்ளிட்டவற்றில் தடயவியல் அலுவலர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.