தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 25 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தற்சமயம் பசுவந்தனையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் கரோணா பாதிப்புக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர் அடுத்த சில நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மத்திய அரசின் கணக்கீட்டின்படி கரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிகளாகவும், இருபதுக்கு குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவை ஆரஞ்சு பகுதியாகவும், பாதிப்பு இல்லாத இடங்கள் பச்சை பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி சிவப்பு நிற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக மாறும் நிலையை கூடிய விரைவில் எட்ட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, "மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி நமது மாவட்டத்தில் தொடர்ந்து 14 நாட்களில் எந்தவித புது நோயாளியும் கண்டறியப்படவில்லை எனில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு பகுதியிலிருந்து ஆரஞ்சு பகுதிக்கு மாறும். அதற்கடுத்தக்கட்டமாக வரும் 14 நாள்களில் எவ்விதமான கரோனா நோயாளிகளும் சேர்க்கப்படவில்லை எனில் பச்சைப் பகுதியாக மாறும்.
தற்போது தூத்துக்குடியில் ஒரு நபர் மட்டுமே கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நமது மாவட்டத்தை ஆரஞ்சு நிற பகுதியாக மாற்றுவதற்கு எந்தவித அறிவுறுத்தலும் வரவில்லை. மே 3ஆம் தேதிக்குப் பிறகு எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை வரும் என எதிர்பார்க்கிறோம்.
ஆனால், அதற்கு முன்பாக மே 3ஆம் தேதிவரை தற்போது உள்ள ஊரடங்கு நடைமுறைகளே கடைப்பிடிக்கப்படும். அதில் எந்தவிதமான தளர்வும் இருக்காது. மே 3ஆம் தேதிக்கு பிறகு நமது மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை பொருத்தும், வல்லுநர்கள், அரசின் வழிகாட்டுதலின் பேரிலும் நமது மாவட்டத்தில் தளர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் போக்குவரத்து, தொழில் நிறுவனங்கள் செயல்படுதல் குறித்த முடிவுகளை அரசு எடுக்கும் முடிவின்படி செயல்படுத்தப்படும்.